தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள், மாணவர்கள்: பிரதமரை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் டெல்லி விரைந்தார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தன்னெழுச் சியாக திரண்ட இளைஞர்கள், மாண வர்களால் பல மாவட்டங்கள் ஸ்தம் பித்தன. லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனா லும், பல இடங்களில் தடையை மீறி காளைகளை அவிழ்த்து விட்டனர். ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். அதைத் தொடர்ந்து சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் மெரினாவுக்கு வரத் தொடங்கினர். விடிய விடிய கொட்டும் பனியிலும் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று 50 ஆயிரம் மாணவர்கள் மெரினாவில் திரண்டனர். இதனால் கடற்கரை சாலை மட்டுமல்லாது சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் நேற்று முன்தினம் இரவு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டிய ராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதுபோல காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் நேற்று நடத்திய பேச்சும் தோல்வியில் முடிந்தது. இதனால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

சென்னையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். புறநகர் பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டத் துக்குப் பிறகு மாணவர்கள் இந்த அளவுக்கு தன்னெழுச்சியாக வெகுண்டெழுந்து போராடுவது இதுவே முதல்முறையாகும். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள், நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருவதன் வெளிப்பாடாகவே இந்தப் போராட்டம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு கட்சியோ, அமைப்போ, தனி நபரோ ஒருங்கிணைக்காமல் இதுபோன்ற போராட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

அலங்காநல்லூரில் 3-வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற் றுள்ளனர். திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 36 இடங் களில் நடந்த போராட்டங்களில் சுமார் 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகள் திரண்டு நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர் கோவில் உட்பட பல இடங்களில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை, ஆரணி யில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆரணியில் மாணவர் இப்ராஹிம், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலும் ஆயிரக் கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர், நேற்றிரவு டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியை நாளை (இன்று) சந்திக்கிறேன். அப்போது, ஜல்லிக் கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்துவேன்’’ என்று தெரிவித்தார்.

புதுவையில் நாளை பந்த்

ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் நாளை (20-ம் தேதி) முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும், மேலும் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

(Tamil Hindu)