தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்” நூல் வெளியீடு

‘தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள’; என்ற எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சகல தமிழ் அரசியல் கட்சித்தலைவர்களையும் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாட்டச் சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அழைப்பு அதிதிகளாக அழைத்திருந்தேன். அவர்களுடன் பேசி அவர்களுடைய சம்மதத்துடனேயே அழைப்பிதழில் அவர்களுடைய பெயர்களையும் பதிவாக்கியிருந்தேன்.


அழைப்பிதழிலேயே ‘கட்சி அரசியலுக்கு அப்பால் கலந்துரையாடுவோம்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இறுதிக்கட்டத்தில் இந்நூல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கிறது என்று காரணம் கூறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சி தடை விதித்ததால் அழைப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் கலந்து கொள்ளாமல் விட்டது மட்டுமல்லாமல் அதன் காரணமாக இந்நூலை ஆய்வு செய்யவிருந்த சட்டத்தரணி பாடும்மீன் ஸ்ரீ கந்தராசா அவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் பின் வாங்கிவிட்டார். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறக் கூடாது அல்லது பிசுபிசுத்துப் போக வேண்டும் என்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குறுகிய எண்ணமாயிருந்தது என்பதைப் பகிரங்கமாக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். தமிழ் அரசியல் சூழல் இவ்வாறுதான் இன்று ஆரோக்கியம் கெட்டு விட்டது. இவ்வாறு நூலாசியர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் திரு.காசுபதி நடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரின்ஸ்காசிநாதர் அவர்கள் கலந்து கொண்டார். முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் திரு.எதிர்மன்னசிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையைப் புதுக்குடியிருப்பு ‘புதுவை’ தலைவர் மா.சதாசிவம் அவர்களும் நூல்பற்றிய உரையை சாமஸ்ரீ தேசமான்ய திரு.பி.டி.ஏ.ஜெயக்குமார் அவர்களும் நிகழ்த்தினர். முதற்பிரதியைச் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அகில இலங்கை தமிழர் மகாசபைத் தலைவர் கலாநிதி கா.விக்கினேஸ்வரன் அவர்களும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் திரு.;மார்டின் ஜெயா அவர்களும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் தி.சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். மாகாண சபை உறுப்பினர்களான திரு.இரா.துரைரட்ணம் மற்றும் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் மின்னஞ்சலில் செய்தி அனுப்பியிருந்தார். கொட்டும் மழை நேரத்திலும் இந்நூல் வெளியீட்டு விழாவில் இருநூறிற்கும் மேற்பட்ட மாற்றுச் சிந்தனை ஆர்வலர்கள் கலந்து கொண்டமை சிறப்பாகும்.

தமிழ் மக்களை ஒற்றுமையாக இருக்கும்படி தலைவர்கள் அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எப்போதுமே ஒற்றுமையாகத்தான் உள்ளனர். அதனால்தான் கடந்த அறுபது எழுபது வருடங்களாகச் சகல தேர்தல்களிலும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கும் பின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் அதன்பின் மீண்டும் தமிழரசுக் கட்சிக்கும் அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும்தான் ஒற்றுமைப் படுவதாயில்லை.
இந்த நூலின் வெளியீடு எந்தத் தமிழ் அரசியல் கட்சிக்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ எதிரானதல்ல. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகளின் கடந்த காலச் செயற்பாடுகளை விமர்சனத்துக்கு உட்படுத்தும் போது பெரும்பான்மைத் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியான தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சியொன்றினை அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனை விமர்சிப்பது தவிர்க்க முடியாததாகும். மேலும் இந்நூலிலுள்ள கட்டுரைகள் யாவும் தினக்குரல் பத்திரிகையில் ஏற்கனவே தொடராக வாராவாரம் வெளிவந்தவையாகும். இதில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரிடத்தில் ஒன்று கூட்டித் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் திசை பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கான – விவாதத்திற்கான ஒரு பொதுவெளியை – ஒரு அரங்கை ஏற்படுத்துவதற்கான – ஒரு பாதையைத் திறந்து விடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகவே இந்;நூல் வெளியீட்டு நிகழ்வு கட்டமைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக அதன் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் குறுகிய கட்சி அரசியல்; மனப்போக்குக் காரணமாக ஒரு பொதுவெளி விவாதத்தை – கட்சி அரசியலுக்கு அப்பாலான ஒரு கலந்துரையாடலை அக்கட்சி விரும்புவதாயில்லை இது கடைந்தெடுத்த கட்சி அரசியலுக்குள் மூழ்கிப் போன ஓர் இறுக்கமான நிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை மாசுபடுத்துவதற்கு அவர்கள் வெளிப்படுத்திய ‘சின்னத்தனம்’ இதற்கு ஒர் உதாரணம் ஆகும். ஆகவே இதனையிட்டு தமிழ்ச்சமூகத்திலுள்ள நடுநிலையாளர்களும் மாற்றுச் சிந்தனையார்களும் தமிழ் அரசியல் கட்சிகளிலே அது எந்தக் கட்சியென்றாலும் சரி அங்கம் வகிக்கின்ற நியாய புத்திக்காரர்களும் சிந்தித்து எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தைச் சமூக பொருளாதார ரீதியாக மேம்பாடடையச் செய்வதற்கான செயற்பாட்டுத்திறன் மிக்க ஓர் உன்மையான நேர்மையான வெளிப்பாட்டுத் தன்மையுடைய ஐக்கியப்பட்ட மாற்று அரசியல் பொறிமுறையைப் பற்றியதான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (செங்கதிரோன்) –
இணைப்பாளர், ‘பொதுவெளி’ (தமிச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டை நோக்கிய கலந்துரையாடல்களுக்கான களம்)
607, பார் வீதி, மட்டக்களப்பு.
இலங்கை
தொலைபேசி : 0094+77 1900614
மின்னஞ்சல் : senkathirgopal@gmail.com