தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை!?

உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக வறுமை நிலவுவதாக உலக வங்கியின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சிங்களவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் வறுமையால் பாதிக்கப்படும் மாவட்டமாக மொனறாகல மட்டும் அடையாளங் காணப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேசிய வறுமைக் கோட்டு வீதமானது நாளொன்றுக்கு 1.50 டொலர் வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் ஒப்பீடு செய்யும் போது முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமை நிலையானது 28.8 சதவீதமாகவும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வறுமை நிலையானது முறையே 20.1 மற்றும் 12.7 சதவீதங்களாகக் காணப்படுகின்றன.

அனைத்துலக வறுமைக் கோடானது நாளொன்றுக்கு 2.5 டொலர் வருமானத்தை வரையறையாகக் கொண்டுள்ளது. இதனுடன் ஒப்பீடு செய்து நோக்கில், மேற்கூறப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களின் சதவீதமானது முறையே 74.4, 60.9 மற்றும் 57.2 சதவீதங்களாகக் காணப்படுகின்றன. மலைநாட்டின் வறுமை நிலையானது சிறிலங்காவின் தேசிய வறுமை நிலையின் பிரகாரம் 10.9 சதவீதமாகவும் அனைத்துலக வறுமைக் கோட்டின் பிரகாரம் 50.6 சதவீதமாகவும் காணப்படுகிறது. உலக வங்கியால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை வரையறுக்கப்படாவிட்டாலும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2014 அறிவித்தலின் பிரகாரம், 19.4 சதவீதமாகும். வடக்கு மற்றும் கிழக்கின் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்களின் வயதெல்லையை நோக்குமிடத்து, உலக வங்கியின் ஆய்வின்படி, 25 வயதிற்கு உட்பட்டவர்களில் 47 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். வடக்கு கிழக்கில் இந்த சதவீதமானது 47 சதவீதமாகவும் ஏனைய மாகாணங்களில் இந்த வீதமானது 40 சதவீதமாகவும் காணப்படுகிறது.

குறிப்பாக இளையோர் மற்றும் கல்வியறிவுள்ள பெண்கள் போன்றோர் தொழில் வாய்ப்பின்மை, தொழிலாளர் சந்தைக்கான தொடர்பாடலை பெற்றுக்கொள்ள முடியாமை போன்றன வறுமை நிலை அதிகரிப்பிற்கான காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளன. மலைநாட்டைப் பொறுத்தளவில், பாதகமான அதிர்வுகளின் பாதிப்பே இவர்களது வறுமை நிலைக்குக் காரணமாகும் என உலக வங்கியின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலையகப் பகுதியில் மகப்பேற்று இறப்பு மிகவும் அதிகம் இடம்பெறுகின்றதாகவும் இந்த அறிக்கை சுட்டிநிற்கிறது. ‘ஐந்து வயதிற்குக் குறைந்த 30 சதவீதமான சிறுவர்கள் நிறைகுறைந்தவர்களாக உள்ளனர். பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைகள் பிறப்பின் போது நிறைகுறைந்தவர்களாகப் பிறக்கின்றனர். பிரசவத்திற்குத் தயாரான நிலையிலுள்ள பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் போசாக்கற்றவர்களாக உள்ளனர்’ என உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சந்தைகளை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளை அதிகரித்தல், கல்விகற்ற இளையோர் மத்தியில் தொழில் முயற்சிகளை அதிகரிப்பதுடன் இதன் மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரம் சிறக்க வழிவகுத்தல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் போசாக்கை அதிகரிப்பதற்கு பல்தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்கவேண்டும். இளையோர்கள் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போது இவ்வாறான வறுமை நிலையை ஒழிக்க முடியும் என உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.