தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை

தமிழ் நாடு ராமநாதபுரம் மாவட்ட மேல் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 10 ஆண்டு தண்டனை விதித்து தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி பகுதியில் தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தக்காரில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற காந்தன் (40), உச்சிப்புளியை சேர்ந்த ராஜேந்திரன்(40), கார் டிரைவர் சசிக்குமார்(41) இருந்துள்ளனர். இவர்கள் வந்தக் காரை சோதனையிட்டபோது அவர்களிடம் இருந்த 4 ஜி.பி.எஸ்.கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், ரொக்கம் ரூ.65 ஆயிரம் ஆகியனவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேலும் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் கொடுத்த தகவலின் பேரில் இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த சுபாஸ்கரன்(43) என்பவரை சென்னையில் கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கயல்விழி தீர்ப்பு வழங்கினார். இதன்படி கிருஷ்ணகுமார், சுபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.45,500 அபராதமும், ராஜேந்திரனுக்கு ஏழரை ஆண்டு சிறை தண்டனையும் ரூ.13 ஆயிரம் அபராதமும் கார் டிரைவரான சசிகுமாருக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.