தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு?

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து முரண்பாடுகளையும், உட்கட்சி பிளவுகளையும் தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரது கொழும்பு அலுவலகத்தில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த வருடம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டது. எனினும் மீண்டும் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாதிருப்பதை சுட்டிக்காட்டி கூட்டமைப்பின் தலைமையிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கட்சியின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுமந்திரனை அடிக்கடி சந்தித்து அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து சட்ட மாஅதிபருடன் பேச்சு நடத்தும்படி வலியுறுத்தி வருகின்றனர். எனினும் சட்ட மாஅதிபருடன் பேச்சு நடத்தப்படும் என்ற பதிலை மாத்திரமே சுமந்திரன் தங்களுக்கு வழங்குவதாகவும் எனினும் இப்பேச்சு நடைபெறுவதாக தெரியவில்லை எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் அரசியல் கைதிகள் விடயத்தை கண்டுகொள்வதே இல்லை என்றும் குற்றம்சாட்டிய பெயர் குறிப்பிடப்பட விரும்பாத அந்த உறுப்பினர், சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகிய மூவரும் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார். எவ்வாறாயினும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் அளவிற்கு பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருப்பதாக தெரிவித்த அவர்,

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மேலும் சில குழப்பங்கள் குறித்து பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்கு தலைமை தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் பத்ததாவது நாளாகவும் இன்றும் தொடர்கின்ற நிலையில் இதுவரை கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் மாத்திரமே சந்திக்க சிறைக்கு சென்று அவர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.