மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர், தோழர் குகன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண தோழர்களின் எற்பாட்டில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் 28 ஆவது தியாகிகள் தின வைபவம் மட்டக்களப்பு, கல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் 19.06.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போராட்டத்தில் மரணித்த தோழர்கள் குணம், காளி ஆகியோரின் தங்கை விமலேஸ்வரி தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் சுகு (தி.ஸ்ரீதரன்) தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அமரர் தோழர் ராசிக்கின் சகோதரர் மு. வரதராசன் அமரர் தோழர் பத்மநாபாவுடன் கொல்லப்பட்ட தோழர் ஜசிந்தா அவர்களின் சகோதரர் எஸ். நவரட்ணம் உட்பட உயிரிழந்த தோழர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் தோழர்கள் மற்றும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரமுகர்களும் தீபம் ஏற்றியும், உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.
தோழர் சசி தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் தோழர் சுகு (தி.ஸ்ரீதரன்) உட்பட அரசியல், சமூக மட்ட தலைவர்கள் மற்றும் தோழர்கள் பலரும் உரையாற்றினர்.
பெரியகல்லாறு சித்திவினாயகர் ஆலைய நிர்வாக சபை தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான திரு. எம். மன்மதராசா, முன்னாள் அதிபர் திரு. க. கந்தசாமி ஈபிஆர்எல்எவ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து ஆகியோரது புதல்வர் அருண் தம்பிமுத்து, கட்சியின் மூத்த தோழர் சித்தியர் என அழைக்கப்படும் சிவராசா, தோழர் கோபன் காரைதீவு, தோழர் சத்தியன் திருகோணமலை, தோழர் மோகன் யாழ்ப்பாணம், தோழர் ஜேம்ஸ் கனடா ஆகியோர் உரையாற்றியவர்களாவர்.
வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் சிறப்புரை ஆற்றினார். தோழர் மதன் அவர்களின் நன்றியுரையுடன் தியாகிகள் தின வைபவம் நிறைவு பெற்றது.