திரிபுரா தோல்வி சொல்லும் பாடம்: எதிர்க்கட்சிகளுக்கு அச்சுதானந்தன் எச்சரிக்கை

நாடு பல்வேறு ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆதலால், சங் பரிவார் அமைப்புகளை தோற்கடிக்க மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் அகற்றி, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாகாலாந்திலும் ஆட்சிஅமைக்க முயற்சித்து வருகிறது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி கோலோச்சி இருந்த நிலையில், பாஜக அங்கு திடீரென விஸ்ரூபெமெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிலும் திரிபுராவில் கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், அங்கு ஆட்சியை பாஜக கைப்பற்றியது பெரும் வியப்பாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் பாஜக எழுச்சி குறித்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நாடு இப்போது மிகவும் ஆபத்தான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து இருக்கிறது. அந்த கட்சியும் இப்போது, பலவீனமடைந்து, சோர்ந்துவிட்டது.

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்ததும் மிகவும் ஆபத்தான கட்டமாகத்தான் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் முதலில் மேற்கு வங்காளத்தை இழந்தார்கள், இப்போது, 25 ஆண்டுகள் ஆண்ட திரிபுரா மாநிலத்தையும் இழந்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமடைந்துவிட்டதையே காட்டுகிறது.

சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து அரசியல் களத்தில் போரிடுவதற்கு இடது சாரி கட்சிகளும் இப்போது வலிமை இல்லாமல் இருக்கிறார்கள். ஆதலால், நாடு சந்திக்கும் சவால்களை உணர்ந்து, சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்து போரிட மதச் சார்பற்ற சக்திகள், கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே அணியாக செயல்படுவது இந்த தருணத்தில் அவசியமாகும்.

இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

பாஜகவையும், சங் பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து அரசியல் களத்தில் போரிட காங்கிரஸ் கட்சியுடன், மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வி.எஸ். அச்சுதானந்தன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே கருத்தை கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் சமீபத்தில் நடந்த மத்திய பொதுக்குழுக்கூட்டத்தில் முன்வைத்தார்.

ஆனால், இந்த தீர்மானத்தை கட்சியின் மற்ற உறுப்பினர்கள் தோற்கடித்துவிட்டனர். இதனால், மீண்டும் அந்த கருத்தை மறுபரிசீலனை செய்ய கட்டாயத்துக்கு இடது சாரிகள் உள்ளனர் என்பதையே அச்சுதானந்தன் அறிக்கை காட்டுகிறது.

ஏ.கே.பாலன்

மேலும், கேரள மாநில அமைச்சரும் மூத்த தலைவருமான ஏ.கே. பாலன் காசர்கோடு நகரில் இன்று கூறுகையில், ”பாஜக தனது பணபலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வெற்றி என்பது, ஜனநாயகத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறுகையில், ”திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றது எதிர்பார்க்காத தோல்வியாகும். ஆனாலும்மக்களின் முடிவை மதிக்கிறோம். இந்த தேர்தலில் 7சதவீதம் வாக்குகள் வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரிந்து இருப்பது கவலைக்குரியதாகும். திரிபுராவில் உள்ள கட்சித் தலைமையும், தேசியத் தலைமையும், இதை ஆய்வு செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் பாஜக பக்கம் சென்றதால் பெரும்பாலான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.