தூத்துக்குடிக்கு கப்பல் சேவை

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென புதிய கேள்வி மனுவை கோருவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட அங்கிகாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கும், கலாசார பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துதற்கும் வர்த்தக சுற்றுலா மற்றும் புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்” என்றார்.

“இதற்கமைவாக, கொழும்பு மற்றும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான திட்டத்துக்கு, எதிர்பார்க்கப்பட்ட கேள்வி மனுவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எனினும், தொடர்பில் உரிய பெறுபேறு கிடைக்கவில்லை. இந்த திட்டத்துக்காக, தற்பொழுது இடம்பெற்றுவரும் கேள்வி மனு நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கும் புதிதாக கேள்வி மனு விண்ணப்பத்தை கோருவதற்கும் பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்தவற்காகவுமே, புதிய கேள்வி மனு கோரப்பட்டுள்ளது” என்றார்.