தேவையில்லாமல் தொட்டதாக இரண்டாவது பெண்ணும் குற்றச்சாட்டு

பிரசார நிகழ்வொன்றில் தனது தலையின் பின்புறத்தில் ஜோ பைடன் முத்தமிட்டதாக லூசி புளொரஸ் தெரிவித்த சில நாட்களிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டு வெளிக்கிளம்பியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உப ஜனாதிபதியாக, 2009ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய ஜோ பைடன், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் முன்னிலையில் வரக்கூடியவராகக் காணப்படுகின்றனர்.

ஹர்ட்ஃபோர்ட்டிலுள்ள தனியார் வீடொன்றில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நிதிச்சேகரிப்பு நிகழ்வொன்றிலேயே தன்னைத் தேவையற்ற விதத்தில் ஜோ பைடன் தொட்டதாக முன்னாள் காங்கிரஸ் உதவியாளரான அமி லப்போஸ் தெரிவித்துள்ளார். உதவியாளர்களுக்கு நன்றி கூற சமையலறைக்குள் நுழைந்த ஜோ பைடன், இரண்டு கைகளாலும் தனது முகத்தைச் சூழ்ந்து, இழுத்து தனது மூக்கை முட்டியதாக அமி லப்போஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், புதிய குற்றச்சாட்டு குறித்து வினவப்பட்டபோது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோ பைடன் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டிய அவரின் பேச்சாளரொருவர், பல்லாண்டு பிரசாரம், பொதுவாழ்க்கையில் எண்ண முடியாயத தடவைகள், கை குலுக்கியதாகவும், அணைத்ததாகவும், அணைப்பை வெளிக்காட்டியதாகவும் ஆனால் ஒரு தடவை கூட முறையற்ற விதத்தில் நடந்துகொள்ளவில்லை என ஜோ பைடன் தெரிவித்ததை சுட்டுக் காட்டினார்