தோழர் குழைக்காதன் எம்மைவிட்டுப் பிரிந்தார். எமது அஞ்சலிகள்

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு தன்னை முன்னிலைப்படுத்தாது முழுமையாக  அர்பணித்த மனிதர்கள் அனேகர்.  இவர்களில் பெரும்பாலானோர்  இடதுசாரிச் சிந்தனையாளர்கள், பெரியாரின் பாசைறையில் வளர்ந்தவர்கள், அல்லது பெரியாரின் கருத்தியலுக்கு உள்ளானவர்கள். இவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி ஈழவிடுதலைப் போராட்டம், இலங்கை தமிழ் மக்கள் மீதான பேரினவாதத்தின் ஒடுக்குமுறை உலகிற்கு வெளிக்கொண்டுவரப்பட்டிருக்குமா ? என்பது கேள்விக்குறியே. ஈழவிடுதலைக்காக தன்னலம் பாராது உழைத்தவர்களின் நிச்சயம் தோழர் குழைக்காதன் இற்கு முக்கிய பங்குண்டு.

தான் கற்றுணர்ந்த தமிழர் பாரம்பரிய மருத்துவ முறையான  ஹோமியோபதி மருத்துவத்தில் ஈழவிடுதலைப் போராளிகளுக்கு மருத்துவ உதவி செய்தவர். இறுதிவரை இந்தப் போராளிகளுடன் உறவில் இருந்தவர். ஈழ விடுதலை போராட்டத்தின் தலைவர்களில் முக்கிய பாத்திரம் வகித்த  தோழர் பத்மநாபாவோடு நல்லுறவில் இருந்தவர். தோழர் நாபாவின் இடதுசாரித் தேடலில் தோழர் குழைக்காதன் உம் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

தோழர் நாபாவின் மரணத்திற்கு பின்பும் தனது இறுதி மூச்சு வரை தோழர் நாபாவின் ஆத்மார்த்த ரீதியான பிணைப்பு தனக்கு உளவியல் ரீதியான பலத்தை தருவதாக நம்பியவர் .தோழர். டாக்டர் குழைக்காதன் இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் தென்திருப்பேரை எனும் அவரது சொந்த ஊரில் மாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார். இச்செய்தி எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மரணம் இயற்கையானது என்றாலும்இ குடந்தையின் மைந்தன் தோழர் ஸ்டாலின் மரணத்தினைத் தொடர்ந்து ஒரு வருட காலகட்டத்தில் தோழர் குழைக்காதன் இன் மரணம் வாழ்வை நேசிக்கும் எம்மைப் போன்றவர்கள் மனதை பிழிந்தே நிற்கின்றது அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் சகல உறவுகளுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.