மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்க…

மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்கவும், நீதித்துறை மற்றும் அனைத்து அரசியல்சட்ட ரீதியில் அமைக்கப்பட்ட அமைப்புகள், சட்டபூர்வமான அமைப்புகள் ஆகியவற்றைக் காக்கவும் “உருக்கு போன்ற ஒற்றுமையை” உருவாக்க வேண்டும் எனும் அறைகூவலை அந்த மாநாடு விடுத்தது.

பிரதான உரை நிகழ்த்திய கட்சியின் பொதுச் செயலாளர் தீபன்க்கர் பட்டாச்சாரியா, இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்கே கட்சி முழுமுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்றபோதிலும், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புகிற எந்தவொரு ஜனநாயகக் கட்சியும் வரவேற்கப்படும் என்றார்.

1930களில் ஜெர்மனியில், பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியைக் கட்டுவதற்கு பல்கேரியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஜியார்ஜி திமித்ரோவ் மேற்கொண்ட சலியாத முயற்சிகளை அவர் நினைவுகூர்ந்தார்; அன்று திமித்ரோவ் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாகக் கூறினார்.
பிற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தச் சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டனர். ஒருசார்பான நிகழ்ச்சியாக ஆகிவிடக்கூடாது என மெய்யாகவே இகக-மாலெ கருதிய காரணத்தால், சாரு மஜும்தாரின் படத்தைக்கூட மேடையில் வைக்கவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உடனடியாக விடைகொடுத்துவிட்டு, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் பட்டாச்சார்யா கோரினார். இந்த கோரிக்கையை மிகவும் வலுவாக முன்வைத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி என்றார்.

அதிகரித்துவரும் பாசிச ஊழிப்பேரலையின் அபாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பிரச்சாரப் பயணக்குழுக்களை அமைப்பதெனக் கட்சி முடிவு செய்துள்ளது.

“மோடி அரசாங்கம் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட மிதப்பில், மேற்கு வங்கத்தில் பாஜக அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் முன்னணிக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு அச்சமூட்டக்கூடிய, கயவாளித்தனமான பெரும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சங்கிப் படை. நம் அனைவரின் ஒட்டுமொத்த உரிமைகள், நமது நேசத்துக்குரிய நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கட்டிக்காக்க ஒன்றுபட்டு நிற்க அறைகூவி அழைக்கின்றோம். அச்சுறுத்திப் பணியவைக்கவும், சட்டத்தைத் தவறாகப் பிரயோகித்தல், கைதுகள், படுகொலைகள் ஆகியவற்றின்மூலம் எம்மை வாயடைக்கச் செய்யவும் மேற்கொள்ளப்படுகிற முயற்சிகளை நாம் எதிர்த்து நிற்கிறோம். இந்தியாவை, இந்துராஷ்டிரமாக மாற்ற நாங்கள் அனுமதியோம்” என்று கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கவும், அந்த மாநில அரசுகளைக் கவிழ்க்கவும் பட்டவர்த்தனமாக ஊழல் வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது பாஜக. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்கிற கருத்தை முன்வைத்துவருகிறது மோடி அரசு. நாடாளுமன்ற ஆட்சி முறையிலிருந்து மாறி, குடியரசுத்தலைவர் பாணி ஆட்சிக்கு இந்தியாவை நகர்த்தும் நோக்கத்தில் இது செய்யப்படுகிறது. இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் அலட்சியம் செய்வதாகும்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறது கட்சி.

விடுதலைப் போராட்ட காலத்தில் மேலோங்கிய வகுப்புவாதம், தேசத்தின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தி, இறுதியில் இந்தியாவைத் துண்டாடுவதில் கொண்டுபோய் விட்டது என்பதை பட்டாச்சார்யா நினைவுகூர்ந்தார். “வரலாற்றின் ஏடுகளில் படிந்துள்ள இந்தத் துயரம் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது; மேலும் பிரிவினைக்கு வித்திடும் வகையில் வகுப்புவாதம் நாட்டைத் தள்ளிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும்” என்றார் அவர். கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஸ்தாபன பலவீனங்களைப் போக்குவதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த சுமார் பத்தாயிரம் கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இந்த சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டனர். அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் கலந்துகொண்டனர்.

எழுதியவர்: பாருண் தாஸ் குப்தா

(இக்கட்டுரையாளர் அசாமில், THE HINDU நாளேட்டின் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘பேட்ரியட்’, வங்காள மொழி ஏடான ‘காம்பஸ்’, ‘மெயின்ஸ்ட்ரீம்” ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். முதுபெரும் பத்திரிகையாளரான இவர், ஒரு காந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆர்சிபிஐ கட்சித் தலைவரான பன்னாலால் தாஸ் குப்தாவுக்கு நெருக்கமானவர்.)

தமிழில்: எஸ்.துரைராஜ்