நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை பெண்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார்.

1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் அரசியல் அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து பொது பாதுகாப்பு அமைச்சரின் நிவாரணத்துக்காக விண்ணப்பித்திருந்தார்.

எனினும் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த பெண் புதிய முன்னகற்றுதல் இடர் மதிப்பீடு கோரிக்கையை முன்வைக்க முடியும் என கனேடிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது. இதேவேளை, சுகவீனமுற்றிருக்கும் தனது கணவர் மற்றும் தமது பிள்ளைகளின் கல்விக்காக கனடாவில் தங்கியிருக்க வேண்டும் என கோரி மனுவை தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது