நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பாரற்று கிடக்க விடப்பட்டுள்ளோம்! – வடக்கு முதலமைச்சர்

(Mithunan )
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று  கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், விசேடதேவைகள் உள்ளவர்களாக இருக்கலாம், இளம் விதவைகளாக இருக்கலாம், குடும்பப் பாரத்தைத் தனியே சுமக்கும் பெண்களாக இருக்கலாம், வயோதிபர்களாக இருக்கலாம், வேறு பல விதங்களில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் யாவரையும் அணைத்துச் சென்று மனதில் அமைதியையும் நிறைவையும் ஏற்படுத்தவே சமூகசேவைகள் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் காலை 9.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் திரு க.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமூகத்தில் விரக்தியான சிந்தனைகளுடன் எமது சகோதர சகோதரிகள் வலம் வருவது எமது சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் புரிந்து கொண்டே மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட சமூக சேவைகள் திணைக்களம் முன்வந்துள்ளது.

அவ்வாறான ஒரு திணைக்களம் தனது சேவைகளை நம் மக்களிடையே விஸ்தரிக்கவே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது.

வடமாகாணசபை முதலமைச்சரின் அமைச்சின் கீழ் இயங்கும் இந்தச் சமூக சேவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பு செய்வதற்கும் அதனை வினைத்திறன் உள்ளதாக மாற்றுவதற்கும் ஏற்ற வகையில் வடமாகாணத்தில் அமைந்துள்ள 05 மாவட்டங்களிலும் மாவட்ட சமூக சேவை அலுவலகங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு அதனடிப்படையில் வவுனியா, கிளிநொச்சி ஆகிய 02 மாவட்டங்களிலும் ஏற்கனவே மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றிக் கொண்டு வருவதுடன் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான மாவட்ட அலுவலகங்களின் கட்டட வேலைகள் பூர்த்தி அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மாவட்ட அலுவலகத்தை இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இம்மாதம் 18ந் திகதி மன்னார் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்படும் என்று நம்புகின்றேன்.

இம் மாவட்ட சமூக சேவை அலுவலகங்கள் சமூக சேவைப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தி செயல்படும் நோக்கிலும் அத்துடன் சமூகத்தில் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய யுக்திகளை கண்டறிந்து செயல்படும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமூக சேவைத் திணைக்களத்தின் பணிகள் வரையறைக்குட்பட்டதன்று. காலத்திற்குக் காலம் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து கால சூழலுக்கேற்ப புதிய திட்டங்களை வகுப்பதுடன் அவை நீண்டு நிலைத்திருக்கக்கூடிய விதத்தில் அதனை அணுகி தீர்வு காணவேண்டிய ஒரு திணைக்களமாக இந்த சமூக சேவைத் திணைக்களம் அமைந்திருப்பதால் அவர்களின் பணி நலிவுற்ற சமூகங்களை நோக்கியதாகவே அமைந்திருப்பன.

ஒரு சமூகம் எதிர்பாராத பாதிப்புக்கு உட்படும் போது அதன்ஆதாரத் தூணாக அதை ஏந்தி நிற்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் சமூக சேவைத் திணைக்களத்திற்கே உரியது. இவ்வாறான சேவைகளை விரைந்து செயற்படுத்துவதற்கு மாவட்ட சமூக சேவை அலுவலகமும் அங்கே கடமையாற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினரும் பெரும் பங்காற்றுபவர்களாக விளங்குகின்றார்கள்.

சமூக சேவைகள் விரிவாக்கப்படுவதற்கும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கும் அந்தந்த மாவட்ட சமூக சேவை அலுவலகங்கள் சிறந்த முறையில் செயலாற்றுவதன் மூலமே அதனைப் பலப்படுத்த முடியும்.

இக் கட்டடத்தை அமைப்பதற்காக ரூபா 11 மில்லியன்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆரம்ப கட்டமாக 2மில்லியன் ரூபாக்களை UNICEF நிறுவனம் மூலமும் மிகுதி 9 மில்லியன் ரூபாக்களை மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழும்கி டைக்கப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக சேவைத் திணைக்களம் பல்வேறுபட்ட உதவிகளை பொதுமக்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவை பற்றிய போதிய விளக்கங்களோ அல்லது விபரங்களோ பொது மக்களிடம் சென்றடையவில்லை எனக் கருதப்படுகின்றது.

இத்திணைக்களத்தினால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுசன மாதாந்த கொடுப்பனவு, புற்றுநோய்க் கொடுப்பனவு, தொழு நோய்க் கொடுப்பனவு, காசநோய்க் கொடுப்பனவு இவற்றுக்கு மேலதிகமாக தலசீமியா என்ற ஒரு அரிய வகை நோய்க்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருகின்றமை பற்றி நாம் அறிந்துகொண்டுள்ளோம்.

சமூக சேவைத் திணைக்களங்களின் பல்வேறுபட்ட உதவிகளுக்காக வருடாந்தம் அண்ணளவாக 275 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்துடன் மாகாண சபை அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர்களின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் இருந்து கணிசமான தொகை இவ்வாறான சமூகப் பணிகளுக்கு பிரித்தொதுக்கப்படுகின்றது.

இந்த நிதி வளங்களைக் கொண்டு நலிவுற்ற மக்களுக்கு முடிந்தளவு உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் குறிப்பிடப்பட்டது போன்ற மாதாந்த உதவிகள் தவிர்ந்த இன்னும் பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களில் கழுத்துக்குக் கீழ் இயங்காதவர்களுக்கு ரூபா.3000 மாதாந்தக் கொடுப்பனவாகவும், இடுப்புக்கு கீழ் இயங்காதவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபாவும் உதவு தொகையாக வழங்கப்படுகின்றது.

அக்கொடுப்பனவுகளை இரட்டிப்பாக்க எமது அமைச்சரவை முயன்று வருகின்றது. அதே போன்று உடல் ஊனமுற்றவர்களின் குடும்பங்களின் சுயதொழில் முயற்சிக்காக 30,000 ரூபா வரையான முழு உதவிக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் விசேட தேவை உடையவர்களை இனம் காண்பதற்கும் இந்த மாவட்ட அலுவலகங்கள் பேருதவியாக அமைவன.இந்த மாவட்ட அலுவலகங்களில் பணிபுரியப் போகின்ற மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதுவரை காலமும் அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் அமர்ந்து பணியாற்றி வந்த போதிலும் அவர்களுக்கென புதிய அலுவலகங்கள் இப்பொழுது அமைக்கப்பட்ட பின்னர் அவர்களின் செயற்பாடுகள் இன்னும் சிறப்புடன் அமையும் என எண்ணுகின்றேன்.

வடமாகாணத்தில் உள்ள 05 மாவட்ட அலுவலகங்களுக்கான உத்தியோகத்தர்களும் சிறப்பாக செயற்படுகின்ற போதிலும் முல்லைத்தீவு மாவட்ட உத்தியோகத்தர்களின் சிறப்புப் பற்றி எனக்கு தரப்பட்ட குறிப்புக்களில் விசேடமாக குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.சமூக சேவைகள் திணைக்களத்தின் மற்றைய முக்கிய செயற்திட்டங்கள் பற்றி ஆராய்ந்தோமானால் இலங்கையிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட அரச வயோதிபர் இல்லம் தனது 60 ஆண்டு சேவைகளை இனிதே நிறைவு செய்து கைதடி மாகாண சபை அலுவலகத்திற்கு அண்மித்த பகுதியில் மிகச் சிறப்புடன் இயங்கி வருவது எம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

சுமார் 200 வயோதிபர்களைத் தம்மகத்தே கொண்டுள்ள இவ் இல்லத்துக்கு ஆண்டு தோறும் 16.5 மில்லியன் ரூபா நிதி அவர்களின் உணவுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் சமூக சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லம் பல நவீன வசதிகளுடன் மெருகூட்டப்பட்டு அங்கே தங்கியிருக்கின்ற முதியவர்களுக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பம்சம் ஆகும்.

உணவு, உடை, உறையுள் போன்ற விடயங்களை மேற்பார்வை செய்வதற்கும் நெறிப்படுத்துவதற்குமாக விசேட தரத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடல், உள ரீதியான அமைதி தேடலுக்கான தியான மண்டபங்கள், கோவில்கள், தேவாலயங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் பொழுதுபோக்கிற்காக 60 அங்குல அளவில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று உள்ளே பொருத்தப்பட்டு அதில் இடைக்கால மற்றும் சமய சார்பான படங்கள், பாடல்கள் ஆகியன காட்சிப்படுத்தப்படுகின்றன என்று அறிகின்றேன்.

இதற்கு மேலதிகமாக அவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான வைத்தியப் பரிசோதனைகளுக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து துறைசார் வைத்திய குழாம் ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அங்கு விஜயம் செய்து அங்கிருக்கும் வயோதிபர்களின் உடல் நிலை பற்றி ஆராய்ந்து தேவைப்படின் அவர்களுக்கான மருந்துகள் போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது.

சில காலங்களுக்கு முன்னர் இந்த வயோதிபர் இல்லங்களில் சீரான கவனிப்புக்கள் இன்றி மிகக்குறைந்த வசதிகளுடன் வயோதிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இன்று மிகவும் நவீனமயப்படுத்தப்பட்டு அங்கிருக்கக்கூடிய வயோதிபர்கள் சுற்றுலா மையம் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை பெறக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதே போன்று பிரத்தியேக வயோதிபர் இல்லங்களுக்கும் சமூகசேவைத் திணைக்களத்தினால் உதவிகள் வழங்கப்படுகின்றன. அங்கு வசிக்கும் ஒவ்வொரு வயோதிபருக்கும் மாதாந்தம் 500 ரூபா என்ற கணக்கில் உதவி வழங்கப்படுவதுடன் கட்டடத்திருத்த வேலைகளுக்கு உச்ச வரம்புத் தொகையாக ரூபா 80,000 மும் சமையல் உபகரணங்களுக்கு ரூபா 40,000 மும் வழங்கப்படுகின்றன.

இன்னும் சில இல்லங்கள் பகல் நேர வயோதிபர் தங்குமிடங்களாக செயற்படுகின்றன. அங்கு காலையில் வயோதிபர்கள் ஒன்று கூடி அவர்களின் பகல் நேரப் பொழுது முழுவதையும் அந்த இடத்தில் கழித்து மாலையில் வீடு திரும்புகின்றனர்.

இதன் மூலம் வயோதிபர்களின் பகல் நேரத் தனிமை நீக்கப்படுவதுடன் அவர்களின் பகல் பொழுது பிரயோசனம் உள்ளதாகவும் மாற்றப்படுகின்றது. குறிப்பாக மன்னார் வங்காலைப் பிரதேசத்தில் உள்ள வயோதிபர் இல்லம் பலதரப்பட்ட கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் தேவைக்குரிய சொற்ப பணத்தினையும் பெற்றுக் கொள்கின்றனர்.

அத்துடன் சில நிலையங்களுக்கு பிளாஸ்ரிக் கதிரைகள், சாப்பாட்டுக் கோப்பைகள் போன்ற பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விழாக்களுக்கு வாடகைக்குக் கொடுத்து அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்களும் அந்த நிலைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான வருமானம் பெறக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வயோதிபர்கள் தமது நேரத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பயன்தரு வருமானத்தைத் தாமும் நிலையமும் பெற உதவி புரிகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக Casual Relief என அழைக்கப்படும் தற்செயல் நிவாரணங்களாக இயற்கை அனர்த்தம், யானை போன்ற பெரிய மிருகங்களினால் ஏற்படுத்தப்படக் கூடிய அழிவுகள் போன்றவற்றிற்கு உச்சவரம்புத் தொகையாக 20,000 ரூபா வரை உதவு தொகையாக வழங்கப்படுகின்றது.

அதே போன்று உடல் ஊனமுற்றவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு மூன்று சில்லு துவிச்சக்கரவண்டி, தோல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மலசலகூடம், வீட்டு வாசல் போன்றவற்றில் நுழைவதற்கு ஏதுவான சாய்தளங்கள் (Ramp) போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ரூபா 50,000 வரை உதவுத் தொகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் பல உதவிகளைப் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள், பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறன் உடையவர்கள் என்று பல நலிவுற்ற மக்களுக்கு உதவி புரிய வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. கிடைக்கும் வரவின் அடிப்படையில் எமது செயற்திட்டங்கள் அமைந்துள்ளன. எனினும் எம்மால் முடியுமான பல சேவைகளை ஆற்றி வருகின்றோம்.

இவ்வாறு பல்வேறுபட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகின்ற இந்த சமூக சேவைத் திணைக்களம் எதிர்வரும் காலங்களிலும் அவர்களின் சேவைகளை இன்னும் விஸ்தரிப்புச் செய்யவும் சிறப்பாகச் செயற்படவும் இச் சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்வடமாகாணம்