நிறைவேறியது சட்டமூலம்

உண்ணாட்டரசிறை (திருத்தச் ) சட்டமூலம் புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் செமசிங்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இரு நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைய புதன்கிழமை மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணி வரையும் அதேபோன்று  வியாழக்கிழமை மாலை 4.30 மணிமுதல் இரவு 7  மணிவரையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வியாழக்கிழமை விவாத முடிவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி வாக்கெடுப்பைக் கோரினார் . 

இதனையடுத்தது இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பிலேயே 45 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டமூலம் அரசாங்கத்தால் நிறை வேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.க்களாக செயற்படும் அலி சப்ரி ரஹீம், நிமல் லான்சா மற்றும் அதாவுல்லா   ஆகியோர் வாக்களித்தனர். 

எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஜே வி.பி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, மற்றும் சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களித்தனர் . 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கட்சியினர் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மொத்தமாக இந்த வாக்களிப்பில் 63  எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை .