பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மீது செருப்பு வீச்சாம்…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ Mathiaparanan Abraham Sumanthiran அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர் கூச்சல் இட்டதாகவும் அவர் மீது செருப்பினை வீசியதாகவும் ஊடகங்கள் செய்தி எழுதுகின்றன. அதன் உண்மைத்தன்மை எவ்வளவு என்பது கேள்விக்குறியாயினும் அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது ஆச்சர்யப்படுவதற்குறியதும் அல்ல.

ஏனெனில் குறித்த உண்ணாவிரத போராட்டத்தினை பார்வையிட வந்த கருணாவுக்கு பலத்த மரியாதை வழங்கப்பட்டது, தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து பதவிக்காய் சோரம் போன வியாழேந்திரனுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது, வீடு கட்ட தடையாக இருந்த அரச மரத்தின் கிளை ஒன்றினை வெட்ட அனுமதி கொடுத்தமைக்காய் ஒரு பிரதேச செயலக உத்தியோகத்தரை பற தெமிலோ என்று பேசி கன்னத்தில் அறைந்த அம்பிட்டிய சுமண தேரருக்கு அங்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது அத்தனைபேரும் பயங்கரவாதிகள் என்றும் பாலச்சந்திரன் கூட பயங்கரவாதிதான் என்றும் பாராளுமன்றத்தில் பேசிய தேரர்களுக்கு அங்கு மரியாதை வழங்கப்பட்டது. மகிந்தவே தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்ககூடிய நல்லவர் என்று மக்கள் மத்தியில் மறைமுக பிரச்சாரம் செய்யும் கஜேந்திரகுமார் அணிக்கு பிக்குவின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டது இவ்வாறு எவர்களெல்லாம் தமிழின விரோதிகளாகவும் மகிந்த விசுவாசிகளாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த உண்ணாவிரத மேடையில் நின்று கருத்துச்சொல்ல அனுமதி வழங்கப்பட்டது அவர்கள் பேச்சுக்கு கரவோசம் எழுப்பப்பட்டது.

இப்படியான ஒரு கூட்டத்தின் மத்தியில் மகிந்தவின் ஜென்ம விரோதியும் மகிந்தவின் ஆட்சியை கலைத்து வீட்டுக்கு அனுப்பிய காரணகர்த்தாவுமாகிய திரு M.A சுமந்திரன் அவர்கள் சென்றால் அவர்கள் கூச்சலிடாதிருப்பார்களா? குழப்பம் விளைவிக்காதிருப்பார்களா? கடந்த ஏப்ரல் மாதம் கல்முனை வடக்கு பிரதேச செயலத்தினை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் ஓர் பாராளுமன்ற தெரிவுக்குழுவையும் அமைத்து அதனூடாக துரிதமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என பணித்தும் இருந்தது அப்போது எங்கே போனார்கள் இந்த பிக்குமார்? முஸ்லிம் தீவிரவாதிகள் மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறாதிருந்தால் இந்த பிக்குகள் முஸ்லிம்களோடு இன்னும் கைகோர்த்துக்கொண்டு கரி தெமலோ பற தெமிலோ என்று தமிழர் கன்னத்தில் அறைந்துகொண்டுதானே இருந்திருப்பார்கள்? இப்போது மட்டுமென்ன தமிழர்களின் மீது இவ்வளவு கரிசனை இவர்களுக்கு? கல்முனையில் தமிழர்களுக்கு தனி பிரதேச செயலகம் வேண்டும் என்று போராடும் இதே பிக்குகள் மறுபக்கம் முல்லைத்தீவில் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து புத்தவிகாரை அமைத்தே ஆவோம் என்று போராட்டம் நடத்துகின்றனரே இதைப்பற்றி எவரும் சிந்திக்க மாட்டீர்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தமிழர்களுக்கு அவசியமான ஒன்று அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அதை நடைமுறைப்படுத்த பிக்குகளுக்கு மஞ்சள் துண்டு பிடிக்க நினைக்கின்றீர்களே அங்குதான் முரண் உள்ளது இன்று நல்லிணக்கம் பேசும் அவர்கள் இன்றுபோல் நாளை இன்னும் ஒரு படி மேலே சென்று உங்கள் நடுவீட்டில் புத்தர் சிலையை கொண்டுவந்து வைப்பார்கள் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? அதற்கு எதிராக கருணாவும், பிள்ளையானும், வியாழேந்திரனும், கஜேந்திரகுமாருமா வருவார்கள்? இல்லை அப்போது இந்த #சுமந்திரன் தான் வரவேண்டும் இந்த சுமந்திரன் தான் பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அதற்கெதிராய் வாதாட வேண்டும். அப்போதும் நீங்கள் எவரும் அவருக்கு மாலை இடப்போவதில்லை அவர் உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்கப்போவதும் இல்லை.