பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்?

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக​வே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அந்தத் தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடிக்கொருதடவை சந்தித்து, தெளிவுபடுத்தியதன் பயனாகவே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளனவென, அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.

பாரிய அதிகாரப் போராட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்ற சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர்நிலை பதவிகளில் இருக்கின்ற சிலர், முன்னான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகள். அவ்வாறானவர்கள், அந்த உயர் பதவிகளிலேயே இன்னுமிருக்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், மனிதப்படுகொலைகள். ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியன தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக, வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக, அத்தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

அத்தரப்பினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, உதாரணம் காட்டியே மேற்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆஜராகுவதற்கு அவருக்கு நீண்ட இடைவெளிக்கு அப்பால் திகதியொன்று வழங்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, அந்தத் தரப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கையொன்றைக் கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களை கவனத்தில்கொண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதவிநிலைகளை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பிரிவினர், பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த இந்தத் தரப்பினர், மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளைத் துரிதப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து நிறைவுக்குக் கொண்டுவருவதற்கு, விசேட நீதிமன்றமொன்றை நிறுவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு பின்வரிசை எம்.பிக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர், இந்த மாற்றங்கள் நிகழுமென்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.