பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை

பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இவரது சகோதரர் காலித், பிரஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்து சுமார் 20 பேரை கொன்றவராவார். இதில் மூன்றாவது குண்டுதாரி நஜிம் லாச்ரோய் என்று பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். சிரிய யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் இவர் பாரிஸ் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதில் விமானநிலைய பாதுகாப்பு ​கமராவில் தற்கொலைதாரிகளுடன் தள்ளு வண்டியை தள்ளிச்செல்லும்போது பதிவான “மூன்றாம் நபர்” குறித்தே பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குண்டு தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பதோடு குண்டுடன் கூடிய மூன்றாவது பயணப்பொதி கண்டுபிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிக்காத இந்த குண்டே அதிக சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. தேடப்பட்டு வரும் மூன்றாம் நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருந்தது.

இந்த குண்டு தாக்குதல்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் நேற்று பிரஸெல்ஸ் நகரில் அவசர சந்திப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த பெருமளவானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு பலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதில் சுமார் 300 பேர் அளவு கயமடைந்ததாகவும் 60 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பெல்ஜியம் சுகாதார அமைச்சர் மக்கி டி பிளொக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதோடு 150 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நான்கு நோயாளர்கள் தொடர்ந்தும் கோமா நிலையில் இருப்பதால் அவர்கள் பற்றி இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று டி பிளொக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதல்தாரிகளை விமானநிலையத்திற்கு ஏற்றி வந்த டாக்ஸி ஓட்டுநர் வழங்கிய முகவரியில் சோதனையிட்ட பொலிஸார் அங்கு குண்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 15 கிலோகிராம் வெடி குண்டொன்றை மீட்டனர்.

இதில் பிராஹிம் எழுதிய குறிப்பொன்று அருகில் இருக்கும் குப்பைதொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர், “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டயாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” என கூறி உள்ளார்.

‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது பரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள சலாஹ் அப்தஸ்லாமை குறிப்பதாக நம்பப்படுகிறது. அப்தஸ்லாம் கைதாகி மூன்று தினங்களிலேயே பிரஸெல்ஸ் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரஸெல்ஸில் பிராஹிம் சகோதரர்கள் இருவரும் போலிப் பெயரில் குடியேறிய வாடகை வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதே அப்தஸ்லாம் கைரேகையைக் கண்டறிந்து, அதன் மூலம் பொலிஸார் அவரைப் பிடித்தனர்.

பரிஸ் தாக்குதலுக்கு அப்தஸ்லாமும், அவரது கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்டிய வீட்டை வாடகைக்கு எடுத்ததிலும் பிராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பிராஹிம் 2015 ஜுனில் துருக்கியின் சிரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் புதனன்று குறிப்பிட்டுள்ளனர். “இந்த நபர் வெளிநாட்டு போராளி என்று வழங்கிய எச்சரிக்கையை பெல்ஜியம் பொருட்படுத்தவில்லை” என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துகான் குற்றம்சாட்டினார்.