பிரான்ஸைத் தொடர்ந்து நோர்வேயிலும் புர்கினிக்குத் தடை?

பெண்களின் உடலில் முகத்தைத் தவிர ஏனையவற்றை மறைக்கும் நீச்சல் ஆடையான புர்கினியை, நோர்வேயிலும் தடைசெய்ய வேண்டுமென, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த கட்சியான முற்போக்குக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பல நகரங்கள், இவ்வகை ஆடைகளை ஏற்கெனவே தடைசெய்துள்ள நிலையிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களுள் ஒருவரான அய்னா ஸ்டெனெர்செனே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சிலரால் அணியப்படும் இவ்வகை ஆடைகள், “அதிதீவிர இஸ்லாத்தின் அடையாளம்” என, அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த வகையான ஆடைகளுக்கு, பிரான்ஸின் பல நகரங்களில் விதிக்கப்பட்ட தடைகள், சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருந்தன. அதேபோன்று, பிரான்ஸூக்கு உள்ளேயும் எதிர்ப்பு எழும்பியிருந்தது. இவ்வாறான தடை, அந்த ஆடைகளை அணிபவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் சகிப்புத் தன்மையின்மையை வெளிப்படுத்துவதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, இந்தத் தடைக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் காரணமாக, ஒரு சில நகரங்களில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தடையை நியாயப்படுத்திய ஸ்டெனெர்சன், “நோர்வேயின் கடற்கரைகளில் புர்கினிகள் நிச்சயமாக அனுமதிக்கப்படக்கூடாது” எனத் தெரிவித்தார். “நீஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக, பிரான்ஸில் புர்கினிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பது சிறப்பானதென நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நோர்வேயில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், பழைவாதக் கட்சியும் முற்போக்குக் கட்சியும் இணைந்து போட்டியிட்டு, அரசாங்கத்தை அமைத்திருந்தன. இதில், முற்போக்குக் கட்சி, அதிக வலதுசாரித் தன்மையை வெளிப்படுத்தும் கட்சியாகும்.

முன்னதாக, பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சார்க்கோஸியும், இந்தத் தடைக்கு ஆதரவு வெளியிட்டிருந்ததோடு, தான் ஜனாதிபதியாகத் தெரிவானால், நாடு முழுவதிலும் இதற்கான தடையைக் கொண்டுவரவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.