பிரித்தானியாவில் 1,00,000 பவுண்ட் பணத்தில் அசத்தல் திருமணம்: சிக்கினார் இலங்கைத் தமிழர்…

பிரித்தானிய நாட்டில் நவீன முறையில் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இலங்கையை சேர்ந்த கிசோக் தவராஜா (25) என்பவர் பிரித்தானிய தலைநகரான லண்டனில் உள்ள Tesco என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் தவராஜா ஒரு ஆண்டுக்கு 16,000 பவுண்ட் (28,71,534 இலங்கை ரூபாய்) ஊதியம் பெற்று வந்துள்ளார். டெஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த நேரத்தில் கூடுதலாக மற்றொரு தொழிற்சாலையிலும் தவராஜா பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடராஜா நந்தகுமார் மற்றும் ஜகாமித்ரா விஸ்வநாதன் என்ற இரு நண்பர்களுடன் இணைந்து தவராஜா ஒரு அதிரடி திருட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார். ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெரா ஆகிய இரண்டு கருவிகளை எடுத்துக்கொண்ட மூவரும் Sutton பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் அவற்றை பொருத்தியுள்ளனர்.

இந்த ஜாமர் கருவி பொருத்தப்பட்டால், ஏ.டி.எம் மையத்தில் நுழைக்கப்பட்ட அட்டை இயந்திரத்திலேயே நின்று விடும். உரிமையாளருக்கு திரும்ப கிடைக்காது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா அட்டை உரிமையாளர் அழுத்திய ரகசிய எண்களை பதிவு செய்துக்கொள்ளும் அட்டை திரும்ப கிடைக்காமல் அவர்கள் அங்கிருந்து திரும்பியதும், அந்த அட்டை மற்றும் ரகசிய எண்களை பயன்படுத்தி தவராஜா ஏ.டி.எம் மையங்களில் பணம் திருடி வந்துள்ளார்.

அதே நவம்பர் மாதம் ஏ.டி.எம் மையத்தில் இரண்டு பெண்களின் அட்டைகள் உள்ளேயே சிக்கியுள்ளது. பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் அட்டையில் இருந்து 4,400 பவுண்ட் பணம் எடுக்கப்பட்டது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை உடனடியாக இருவரும் பொலிசாரிடம் புகார் அளிக்க மூவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த யூலை மாதம் தன்னை விட 3 வயது மூத்தவரான கிருத்திகா ஸ்கந்ததேவா என்ற பெண்ணை தவராஜா வெகு ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.

லண்டன் நகரில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ஒன்றான Grosvenor House என்ற ஹொட்டலில் தவராஜாவின் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.

திருமணத்தில் கலந்துக்கொண்ட சுமார் 400 விருந்தினர்களை தவராஜா ஸ்பெஷலாக கவனித்து அசத்தியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு 16,000 பவுண்ட் மட்டுமே வருமானம் பெற்ற தவராஜா இந்த திருமணத்திற்கு மட்டும் 1,00,000 பவுண்ட்(1,79,26,835 இலங்கை ரூபாய்) செலவு செய்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த திருமண விவகாரம் வெளியே கசிந்த பிறகு சந்தேகம் ஏற்பட்ட பொலிசார் தவராஜாவை விசாரணை செய்ததில் அவர் அனைத்து உண்மையையும் கூறியுள்ளார்.

பின்னர், மற்ற இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தவராஜாவின் நண்பர்களுக்கு தலா 10 மாதமும் தவராஜாவிற்கு 8 மாதங்களும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.