புதிய அரசியலமைப்புத் தொடர்பில் விவாதம் நடக்காது

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளைத் தொடக்குதல் மீதான தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதம் எதிர்வரும் 26ஆம் திகதியன்று இடம்பெறாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதத்தை எதிர்வரும் 26ஆம் திகதியன்று நடத்துவதற்கு, முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதனை ஒத்திப் போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அடுத்தவாரம் வேறுவிடயங்கள் நிரலிடப்பட்டுள்ளன. இவற்றுள் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் தாக்குதலும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம், 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.மக்கள் கருத்தை உள்வாங்கும் நடவடிக்கை கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றது என்றும் காலை 09.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அத்துடன், 0112437676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 0112328780 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும் என தெரிவித்துள்ள அக்குழு, constitutionalreforms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் கருத்துக்களை அனுப்பமுடியும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.