புதிய கட்சி அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்!

புதிய கட்சியை அமைக்கும் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் தரப்பினர் தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு நாங்கள் தான் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்கள் என கூறிக்கொண்டு கட்சியை பலவீனப்படுத்த தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சிறு குழுவினரின் ஏதேச்சாதிகார தீர்மானங்களினால் கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி வேறும் ஓர் கட்சியில் இணைந்து கொண்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்