‘புதிய தேசிய கொடி வேண்டும்’

“இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. மாறாக, அதற்குரிய கௌரவத்தையே அளித்தேன். இந்த விவகாரத்தைக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் திசை திருப்பி, பூதாகாரப்படுத்தும் நோக்கிலேயே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று, வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“கடந்த 65 ஆண்டு காலமாக, தேசியக் கொடியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று, தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

“மூவின மக்களையும் சமமாகப் பிரதிபலிக்கும் தேசியக் கொடியொன்று அத்தியாவசியமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், அவர் நேற்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்கவின் நிதியொதுக்கீட்டில், மூவின மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கும் நிகழ்வொன்று, வவுனியா, பரக்கும்ப மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதற்கு, என்னையும் அழைத்திருந்தார்.

“இத்தகைய நிகழ்வுகளில், கொடியேற்றுவதென்பது ஒரு மரபல்ல. எனினும், மாகாணக் கொடியை நான் ஏற்றுவதாகவும் தேசியக் கொடியை, வலயக் கல்விப் பணிப்பாளர் ஏற்றுவார் எனவும், வழக்கம் போல், பாடசாலைக் கொடியை அந்தப் பாடசாலையின் அதிபரே ஏற்றுவார் என்றும் குறிப்பிட்டேன்.

“எனினும், மாகாணக் கொடி, அங்கு இருக்கவில்லை. பதிலாக பௌத்த கொடியே காணப்பட்டது. இந்நிலையில், அந்த பௌத்தக் கொடியை, ஜெயதிலக ஏற்றினார். இதனைத் தொடர்ந்து, பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையில் வழிபாட்டுக்கு அழைக்கப்பட்டோம். விகாரைக்கு வெளியில் பாதணிகளைக் கழற்றிவிட்டு, மலர் தட்டுடன் சென்று, புத்தபெருமானை வணங்கி, மலர்தூவி அர்ச்சனை செய்தேன்.

“நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாகவே நடைபெற்றன. முடிவில், அங்கிருந்து விடைபெற்றேன். எனவே, இந்த விடயம், அந்தப் பாடசாலை நிகழ்வில் ஒரு பிரச்சினையாக எழவில்லை. எனினும், சில ஊடகங்களில் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடுவது, உண்மைக்குப் புறம்பானதாகும்.

“இந்நிலையில், இவ்விவகாரம் திரிபுபடுத்தப்பட்டு, தேசியக் கொடியை நான் அவமதித்ததாக செய்திகள் வெளிவந்தன. இது முற்றிலும் தவறானதாகும். தேசியக் கொடியை சேதப்படுத்தினாலோ அல்லது அதனை ஏற்றவிடாமல் தடுத்தாலோ தான், அது அவமதிப்பதாகும். மாறாக, எனது சார்பில் எமது உயரதிகாரியை ஏற்றும்படி தான் நான் பணித்தேன். அவ்வாறு தேசியக் கொடி ஏற்றப்படும் போது, அதற்குரிய கௌரவத்தையும் அளித்தேன்.

“இலங்கையில் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்றுவரை, தமிழ்த் தேசிய உணர்வுடைய எவரும் இக்கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 65 ஆண்டு காலமாக, தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என, தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

“இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையும் முக்கியமான விடயமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இன்றைய புதிய அரசியல் யாப்பில் இணைத்துக் கொள்வதற்காக, வடமாகாண சபையால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனையிலும், இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மூவின மக்களும் விரும்பி மதித்து ஏற்றுக்கொள்ளத்தக்க கொடியொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு மாறாக, எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு கொடியை நான் மட்டுமே ஏற்கவில்லை என்பதாகப் போலிப் பிரசாரம் செய்யப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. மக்களே, எமது எஜமானர்கள். ஆகவே, இப்பிரச்சினையை, மக்களிடமே விட்டுவிடுகின்றோம்” என, அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளார்.