பைடனை இதுவரையில் வாழ்த்தாத ரஷ்யா, சீனா

இந்நிலையில், ஐ. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுக்காகக் காத்திருப்பதாக நேற்று தெரிவித்த ரஷ்யா, ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வாக்களிப்புடன் இணைந்ததான சட்ட சவால்களை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பைடனின் வெற்றியைக் கணக்கெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள சீனா, இன்னும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை.

இதேபோல ஜனாதிபதி ட்ரம்புக்கு நெருங்கியவராகக் காணப்படும் பிரேஸில் ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னரோவும் பைடனுக்கு இன்னும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பைடனின் வெற்றி குறித்து வடகொரிய ஊடகங்கள் அமைதியாகக் காணப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்ற பின்னரும் இரண்டு நாள்களுக்கு வடகொரிய ஊடகங்கள் அதைக் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதேவேளை, வாக்கு இறுதி செய்யப்படும் வரையில் வெற்றியாளருக்கு துருக்கி வாழ்த்துத் தெரிவிக்காது என அந்நாட்டு ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவானின் கட்சியின் பேச்சாளரொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டச் சிக்கல்கள் முடிவடையும் வரையும் வெற்றியாளரை அங்கிகரிக்கப் போவதில்லை என மெக்ஸிக்க ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவல் லொபேஸ் ஒப்பிரேட்டர் நேற்று கூறியுள்ளார்.