பொங்கு தமிழ்போல பொங்குவோம்: கூட்டாகத் தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

தமிழ் மக்கள் பேரவை, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், டெலோ மற்றும் சர்வமத அமைப்புக்கள், கடற்றொழிலாளர் அமைப்புக்கள், காணாமற் போனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்திய கலந்துரையாடலொன்று, யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்றுக் காலை (14) 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போதே, மேற்படி தொடர் மக்கள் போராட்டம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் நல்லாட்சி நடப்பதாகக் காண்பித்துக்கொண்டு, வடக்கு – கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் வடக்கு – கிழக்கின் மீள்குடியேற்றம், காணாமற்போனவர்கள் விடயம் மற்றும் படையினருக்கான நில அபகரிப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமை போன்ற அடிப்படைப்

பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணக்கோரியுமே, இந்த மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மக்களுடைய போராட்டங்களுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிடின், வடக்கு – கிழக்கில் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை முடக்கும் வகையில், மக்கள் போராட்டங்கள் தொடுக்கப்படும். எனவும், இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன், ‘வடக்கு – கிழக்கில் தொடர்ச்சியானதும் பாரியளவிலானதுமான மக்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்த தீர்மானித்திருக்கின்றோம்’ என்றார்.

‘நல்லாட்சி அரசாங்கம் என, தம்மைத் தாமே வியந்துகொண்டு, முன்னைய ஆட்சியாளர்கள் செய்த அதே வேலைகளையே தற்போதையஅரசாங்கமும் செய்கின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த விகாரை அமைப்பதன்; ஊடாக, வடக்கு – கிழக்கை, சிங்கள பௌத்த மயமாக்க அரசாங்கம் நினைக்கின்றது’ என்றும் அவர் கூறினார்.

இங்கு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றுடன் இணைந்ததாக, தமிழ் மக்களுக்கு அவர்களுடைய விருப்பத்துக்கு அமைவான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தியதாகவும் இந்தப் போராட்டங்கள் அமையும்’ என்றார்.

‘இந்த அரசாங்கம், தீர்வு விடயத்தை ஒன்றையாட்சிக்குள் முடக்கவே நினைக்கின்றது. அதற்கு எதிரான போராட்டமாகவும் இது அமையும். மேலும், போருக்குப் பின்னரான சூழலில், நல்லாட்சி அரசாங்கம் எனத் கூறிக்கொள்ளும் அரசாங்கமும் கூட மக்களுடைய போராட்டங்களுக்கு நிர்ப்பந்தித்திருக்கின்றது. பாரியளவிலான மக்கள் இணைந்த போராட்டமாக இது அமையும்’ என அவர் மேலும் கூறினார்.

தனது முழுமையான அரசியல் மரணத்திற்கு முன்பு சுரேஷ் பிரேமசந்திரன் கையில் எடுக்கும் ஆயுதம் என்று இதனை அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மரணிக்க முன்பு இறுதியாக எழுத்து பேசிவிட்டு மரணிக்கும் மனிதனின் செயலை இவர்கள் செய்ய முயலுகின்றனர்