மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது

காணாமல்போன எம்.எச்.370 விமானத்தை தேடிவரும் குழுவினர் விபத்தில் மூழ்கிய 19ஆம் நுற்றாண்டு கப்பல் ஒன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர். இந்திய சமுத்திரத்திற்கு கீழ் கடந்த கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் மர்மப் பொருளொன்று பற்றி கடலுக்கு அடியில் தேடுதலில் ஈடுபட்டு வரும் சோனார் உபகரணம் சமிக்ஞை வழங்கியது.

இம்மாத ஆரம்பத்தில் ஆளில்லா நீர்மூழ்கி கொண்டு இந்த பொருள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குறித்த மர்மப் பொருள் உலோகத்தால் அமைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கப்பல் ஒன்று என மேற்கு அவுஸ்திரேலிய அருங்காட்சியக நிபுணர்கள் நம்புகின்றனர்.

மாயமாகி இருக்கும் மலேஷிய விமானத்தை தேடும் குழு கடலுக்கடியில் கண்டுபிடித்த இரண்டாவது கப்பல் இதுவாகும். கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் இருக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட மர்மப் பொருள் ஒன்றின் படத்தை அந்த குழு வெளியிட்டிருந்தது. அதில் கப்பலின் நங்கூரம் இருப்பது தெளிவாக தெரிந்தது.

எம்.எச்.370 விமானம் மாயமாகி சுமார் இரண்டு ஆண்டுகளை எட்டும் நிலையில் அதனை கண்டுபிடிப்பது உலகில் மிக சிக்கலான தேடுதலாக மாறியுள்ளது.