மலையகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மேல்கொத்மலை மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (15) திறந்துவிடப்பட்டுள்ளன. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியன் நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் நோட்டன், விமல சுரேந்திர, மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.