மீண்டும் சரிந்தது ரூபாய்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.