மெரினாவில் திரண்ட 5 ஆயிரம் இளைஞர்கள்: கொட்டும் பனியிலும் தொடர்ந்த போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக் கக் கோரி மெரினாவில் நள்ளிர விலும் கொட்டும் பனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந் தனர். முதல்வர் வந்து உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களிடம் கலைந்து போகச்சொல்லி போலீஸார் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் தாசில்தார் சிவ ருத்ரய்யா தலைமையில் 4 அரசு அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தியும் பயனில்லை. முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும் என கூறி, போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் கூறும் போது, “நாங்கள் ஜனநாயக முறையில் மிகவும் அமைதியாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் ஒரே நோக்கம் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது மட்டும்தான். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கும் அதிகாரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடை பெறும். அதற்கான சட்டம் நிறை வேற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம்” என்றனர்.

உணவு கொடுத்த ஆர்வலர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு சமூக ஆர்வலர் கள் பலர் உணவு, தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் மற்றும் பல பொருட்களை கொண்டு வந்து கொடுத்ததுடன், போராட்டத்திலும் பங்கெடுத்து உள்ளனர். மேலும், இரவில் படுப்பதற்கு தேவையான பாய், தலையணை, போர்வை போன்றவற்றையும் சிலர் கொண்டுவந்து கொடுத்துள்ளனர். இரவில் கொட்டும் பனியிலும் போராட்டம் தொடர்ந்தது. பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் போராட்ட களத்துக்கு வந்துகொண்டே இருந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இளைஞர்களின் இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் டி.ராஜேந்தர், மயில் சாமி உட்பட பலர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு ஆதரவு தெரி வித்தனர். நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

டார்ச் லைட் வெளிச்சத்தில்

மெரினா கடற்கரை பகுதியில் நேற்றிரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து அப்பகுதியில் வெளிச்சம் ஏற்படுத்தினர். தங்கள் போராட்டத்தை சீர்குலைக்க, வேண்டும் என்றே மின் தடை ஏற்படுத்தியதாக இளைஞர்கள் குற்றம் சாட்டினர். நள்ளிரவு வரை மின் தடை நீடித்தது.