மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இருவரும் மாறிமாறி அறிக்கைகள் விட்டு முரண்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், “உன்னுடைய ஆசிரியரில் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டாயா?” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்க, பதிலுக்கு அவர் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என தெரிவித்துள்ளார். “குற்றம் இருந்தால் தானே கண்டுபிடிக்கலாம்” என முதலமைச்சர் மீளவும் கேட்க, “குற்றம் இருக்கின்றது. நெற்றிக்கண்ணையும் நீங்கள் திறந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களின் சிவப்புப் பொட்டுத்தான் நெற்றிக்கண்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிரித்தபடி பதிலளித்துள்ளார்.