ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுட்கைதிகள் விடுதலை

ஆயுட்தண்டனை பெற்ற முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானத்துக்கு ஒப்புதல் கோரி தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இத்தீர்மானத்துக்கு பன்வரிலால் புரோஹித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், முற்கூட்டியே விடுதலை செய்யும் தீர்மானம் தொடர்பான பரிந்துரைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்தவகையில், குறித்த வழக்கானது நீதிபதிகள் ஆர். சுப்பையா, சி. சரவணன் ஆகியோர் உள்ளடங்கிய அமர்வின் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு உட்துறைச் செயலாளர் சார்பில் வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்பதில் மனுவில், “ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் அளித்துள்ள பரிந்துரை தமிழ்நாடு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசாங்கத்தின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என ஆயுட்தண்டனைக் கைதிகள் உரிமை கோர முடியாது. ஆயுட்தண்டனை என்பது ஆயுள் முழுவதும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஆயுட் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையைக் குறைப்பது உள்ளிட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசாங்கத்துக்கு பரிசீலிக்க மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட முடியும். எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், நேற்று இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.