வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்

தமிழகம் மற்றும் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திப்பதற்கு நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

2016 -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய பதில் கடிதத்தில், ‘நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.