வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் களப்புகளை ஆழமாக்கி நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் 3 நாட்களாக கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினாலேயே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தொண்டமானாறு, மத்தொணி மற்றும் அச்சுவேலி உப்பாறு ஆகிய நீர்நிலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் 2 நீர்நிலைகளிலும் தலா 20 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 20 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதேவேளை பூநகரி, செட்டியார் குறிச்சி, மற்றும் குறிஞ்சி 1, குறிஞ்சி 2 ஆகியவை உட்பட்ட சில களப்புக்களை ஆழமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்களினால் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பொறுபேற்றுள்ள அமைச்சரினால் குறித்த கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் குறித்த மாவட்டங்களுக்கான கள ஆய்வு விஜயத்தினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் பூநகரி, செட்டியார் குறிச்சி களப்பினை இந்த வருட இறுதிக்குள் முழுமையாக ஆழமாக்கி வழங்க முடியுமென பிரதேச மக்களுக்கு அதிகாரிகளினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாச்சிக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கிறஞ்சி 1 மற்றும் கிறஞ்சி 2 ஆகிய களப்புகளையும் ஆழமாக்கி இறங்குதுறையை புனரப்பதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரணைமாதா நகர் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராய்ந்த நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பான அறிக்ககையினை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட உதவிப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாற்றில் காணப்படுகின்ற மண் திட்டுக்களையும் அகற்றுவது தொடர்பாக குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்த அதிகாரிகளினால் ஆராயப்பட்டது. அதனை அகற்றுவதற்கு கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டடிய நடைமுறைத் தேவை இருப்பதன் காரணமாக குறித்த அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச உதவிப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களப்புக்களை ஆழமாக்கும் செயற்பாடுகனிலும் அகழப்படுகின்ற மணல்களை கொட்டுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளமையினால் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பிரதேசங்களின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள் அறிவுறுத்ப்பட்டுள்ளனர்.

குறித்த கள ஆய்வுப் பணிகளில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜி. கஹாவத்த, கற்றொழில் உத்தியோகஸ்தர் எஸ். சிவதர்ஸன், களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரி மஹிந்த மற்றும் பொறியியலாளர் ஆரியரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.