வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவோம்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைக்காக புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கை இணைக்கும் முயற்சிகள் இடம்பெறுமாயின் கிழக்கு மக்கள் அமைப்பு அதனை எதிர்த்து பெரும் போரட்டத்தினை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த வீரசேகர தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான கிழக்கு மக்கள் அமைப்பின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்கு திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு‍ உரையாற்றுயைிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் ஆளுனர்களின் அதிகார குறைப்பு, மாகாண பொலிஸ் மா அதிபர்கள் முதலமைச்சர்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

ஆளுனர் முதலமைச்சருக்கு பொறுப்பு கூற வேண்டியவராக இருத்தல் வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல் பொலிஸ் அதிகாரம் முழுமையாக வேண்டும் என்றும், சட்டம் வரையும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், காணி அதிகாரமும் மாகாண சபைகள் வசமாக வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கைளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.

இந்த யோசனைகள் அனைத்தும் பிரிவினைக்கு வழி சமைப்பதாகவே அமைந்துள்ளதால் அவற்றினை நாங்கள் கடுமையாக எதிர்கின்றோம்.
1987 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த வரதராஜா பெருமாள் வடக்கு கிழக்கை தமிழ் ஈழமாக பிரகடனப்படுத்தியது எமக்கு நிறைவிருக்கின்றது.

அதனால் இந்த நாட்டில் ஜனாதிபதிகளாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் அதற்கு இடம்கொடுக்கவில்லை.
ஆனால் தற்போதைய அரசாங்கம் சில திருத்தங்களை மேற்கொண்டு வடக்கு கிழக்கை இணைக்க முற்படுகின்றது.

அதனை நாட்டில் வாழும் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களே அதனை தீர்மானிக்க வேண்டும். அதற்கு மாறாக அமெரிக்காவும், தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் அதனை தீர்மானிக்க முடியாது.
அவ்வாறான செயற்பாடுகளை அரசாஙகம் முன்னெடுத்தால் கிழக்கு மக்களாக நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்றார்.