வடமராட்சி கிழக்கில் கண்டனப் பேரணி – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ் மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று பூரண ஹர்த்தால் மற்றும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சிக் கிழக்கின் ஏனைய பொது அமைப்புகளான தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் சேர்ந்து மேற்கொண்ட இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சனைகளை முன்னிறுத்தி கோசங்களை எழுப்பினர். காலை 10:30 மணியளவில் தாளையடி கடற்கரை மாதா கோவிலடியில் ஆரம்பித்த இவ் எதிர்ப்புப் பேரணியானது ஊர்வலமாகச் சென்று மருதங்கேணி பிரதேச செயலகத்திக் முன்னால் பெரும் கோசங்களுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் நிறைவு பெற்றது.

இதில் பிரதேசத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்கலைக் கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் போன்றோர் கலந்து கொண்டு கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் இரு கோசங்கள் பிரதானமாக முன்வைக்கப்படடன. 1) வடமராட்சி கிழக்கில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல். 2) 30 வருடங்களாக திருத்தப்படாமல் காணப்படும் வடமராட்சிக் கிழக்கின் பிரதான வீதிகளை திருத்த வலியுறுத்தல். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திரு க.கனகேஸ்வரன் அவர்களுடன் கலந்தரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூட்டத்திற்கு நடுவில் உரையாற்றும் போது மக்களின் உணர்வுகளை தான் புரிந்து கொள்வதாகவும் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தானும் ஆதரவளிப்பதாகவும் கூறினார். மேலும் மக்களின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு எடுத்துச் சென்று அதனை தீர்ப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்வதாகவும் உறுதியளித்தார். இதே போன்று ஓர் ஆர்ப்பாட்டம் ஆனது கடந்த 23-12-2015 அன்று வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் பிரதேச செயலர் திரு க.கனகேஸ்வரன் அவர்ளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான பதில் எதுவும் வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.