வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடு….?

வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராசாவிற்கும் ஈபிடிபி தலைமைக்குமிடையே முரண்பாடுகள் உண்டு என்பதை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களது கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் ஜனநாயக ரீதியிலான கருத்து முரண்பாடே அதுவெனவும் அவர் தெரிவித்தார்.

ஈபிடிபியினிலிருந்து சந்திரகுமார் மற்றும் தவராசா போன்றவர்கள் வெளியேறினர். பின்னர் திரும்பி வந்தனர். அவர்கள் வெளியேறியதாலோ திரும்பி வந்ததாலோ கட்சியில் அதிசயங்கள் ஏதும் நடந்திருக்கவில்லையெனவும் தெரிவித்த அவர் அண்மையில் நூல் வெளியீடொன்றில் கட்சி சார்பில் அவர் மன்னிப்பு கோரிய விவகாரம் கூட அவரது தனிப்பட்ட கருத்தென தெரிவித்தார்.

ஆனாலும் பின்னர் தான் அவ்வாறு மன்னிப்பு கோரியிருக்கவில்லையெனவும் தவராசா ஊடகங்களிற்கு அறிவித்திருந்ததாக் அறிந்திருந்தாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே அண்மையில் முன்னாள் ஈபிடிபி முக்கியஸ்தர் பொன்னையா என்பவர் கடந்த கால ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளினை பற்றி தற்போதைய எதிர்கட்சி தலைவரும் அறிந்திருந்தாக தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையினை தோற்றுவித்துள்ளது.