வவுனியா கடை எரிப்பு

வவுனியா கடை எரிப்பு விவகாரம், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா அல்லது விபத்தா என்ற கோணத்தில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விசாரணை அறிக்கை வந்த பின்னர், குறித்த கடை, திட்டமிட்டு எரிக்கபட்டதென்றால், நாம் கண்டனத்தைப் பதிவு செய்வோம்”” என்று, வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

“வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்தமை முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை எனத் தீர்மானித்துவிட முடியாது. வவுனியா நகருக்கு அண்மையில், பள்ளிவாசலுக்கு அருகிலான 14 கடைகள், முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமாக உள்ளன. அவை அனைத்தும், வீதிகளை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாகக் அமைக்கபட்டு உள்ளன.

“குறித்த கடைத் தொகுதிகளை அகற்றுமாறு கோரி, இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர். அது நடைபெற்ற சில நாட்களிலேயே. கடை எரிந்துள்ளது. அதனால், குறித்த இளைஞர் குழுவால் எரிக்கபட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்திருந்தது.

“அதேவேளை, கடை எரிந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மின் ஒழுக்கு காரணமாகவும் கடை எரிந்திருக்கலாம் என, சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எரிந்த கடையில் இருந்து சில சான்றுகளைப் பெற்று, கொழும்புக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அது குறித்து மேலதிக அறிக்கை வந்த பின்னரே கடை எரிந்தமைக்கு காரணம் கண்டறியப்படும்.

“எனவே, குறித்த அறிக்கை வரும் வரையில், அது திட்டமிட்டு எரிக்கப்பட்டது எனும் முடிவுக்கு நாம் வர முடியாது. அறிக்கை வந்த பின்னர் திட்டமிட்டு எரிக்கபட்டது என்றால் நாம் கண்டனத்தை பதிவு செய்வோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.