வவுனியா, முல்லைத்தீவில் கறுப்புக் கொடி போராட்டம்

வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமான இன்று, முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை பத்துமணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.