விக்கியை பதவியிலிருந்து நீக்க கூட்டமைப்பு முயற்சி

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்காத வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு கூட்டமைப்பினர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படாததுடன் கூட்டமைப்பின் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரை பதவி விலக்குவது குறித்து கூட்டமைப்புக்குள் தீவிரமாக ஆராயப்படுவதாகத் தெரிய வருகிறது. அதேநேரம் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபை யொன்றின் முதலமைச்சருக்கு எதிராக எவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத் தைக் கொண்டுவர முடியாதென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.

முதலமைச்சரை நீக்குவதாயின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கையளிக்க முடியும். மாறாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அவர் கூறினார்.

கடந்த கால செயற்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு விசனம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. எனினும் இது அவர்களுடைய உள்ளகப் பிரச்சினை அவர்களின் இந்தப் பிரச்சினைக்குள் எதிர்க்கட்சி ஒருபோதும் சிக்கிக்கொள்ளாது என்றும் தவராசா தெரிவித்தார். முதலமைச்சரை நீக்குவது தொடர்பில் ஏதேனும் கலந்துரையாடப்பட்டுள்ளதா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு எதி ரான சர்வதேச விசாரணை குறித்து வடமாகாண சபை முதலமைச்சருக்கும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் தான் கவலையடைவதாக மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தான் நடுநிலையாகச் செயற்படப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித் திருந்தார். இதனை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப் பிடத்தக்கது. (எப்.எம்.)