விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்கு மாகாண சபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரணைக்கு இடையுறுகள் ஏற்படாமல், அவர்களின் உத்தரவாதத்தை முதலமைச்சர் கோரியதாகவும் அது தவரென்றும் சட்டத்துக்கு முரணானதென்றும் சுமந்திரனும், மாவை சேனாதிராசாவும் முன்னிலை வகித்து அவ்வாறு செய்யமுடியாது என்று கூறியது மாத்திரமல்லாமல், தமக்கு சாதகமான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களைத் திரட்டி முதல்வர் மீதான ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்தார்கள்.

“ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரமே அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கான விசாரணை குழு நியமிக்கப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர்கள் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஏனைய இரு அமைச்சர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஆகியோருக்கு எதிரான சாட்சியங்கள் சமூகமளிக்க முடியாததால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்வில்லை.

“அரச உத்தியோகத்தர்களான சாட்சிகள் தாங்கள் பழிவாங்கப்படுவோமென்று அஞ்சியதால், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்கான உத்தரவாதம் கோரப்பட்டது. உத்தரவாதம் அளிக்காமையால் சாட்சியங்களால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாமையாலும், முக்கியமான சாட்சியான அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு சென்றிருந்ததனாலும், விசாரணைக் குழுவினால் சாட்சியங்களின் முழுமையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஆகவேதான், குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது, இராஜினாமா கடிதங்களை கோரிய முதலமைச்சர், ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறவேண்டுமென்றும், விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்கு இரு அமைச்சர்களையும் ஒரு மாதத்துக்கு அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகியிருக்குமாறு கோரினார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. இதில் என்ன சட்டப்பிரச்சினை இருக்கிறது என்றும் புரியவில்லை.

விசாரணை முடியும் வரை, விலகியிருக்கத் தயார் என்று நேர்மையான அமைச்சர்களால் ஏன் சொல்ல முடியவில்லை. இங்குதான், தமிழரசுக் கட்சியின் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர், முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். அவ்வாறு அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருக்க முடியாது என்றும் கூறினர்.

“முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யார் செய்தனர். சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் சென்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளித்தனர். இதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொலைபேசி வழியாக முதலமைச்சரை தொடர்புகொண்டு இரு, அமைச்சர்களையும் தமது கடமைகளிலிருந்து நிறுத்திவைப்பது தவறென்றும் அவர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளுமாறும், ஆலோசனை கூறினார்.

“ அத்துடன் தான் தொலைபேசியில் கூறியவற்றை கடிதமாகவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இந்த இடத்தில், சம்பந்தனுக்கும் முதலமைச்ருக்குமிடையில் ஒரு கடிதப் போராட்டமே நடைபெற்றது. சம்பந்தனின் கடிதத்துக்கு முதல்வர் பதிலனுப்ப, முதல்வரின் கடிதத்துக்கு சம்பந்தன் பதிலனுப்ப, மீண்டும் சம்பந்தனின் கடிதத்துக்கு முதல்வர் பதிலனுப்ப இது ஒருமுடிவற்ற கடிதப் போராட்டமாக போய் விடுமோ என அஞ்ச வேண்டியிருந்தது.

“இந்தச் சந்தர்ப்பத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறின. நூற்றுக்கணக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள், ஊர்வலமாகச் சென்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், தொடர்ந்தும் விக்கினேஸ்வரன்தான் முதல்வராக இருக்கவேண்டு மென்றும் வலியுறுத்தினர்.

“இதனைத் தொடர்ந்து தமிழ்மக்கள் பேரவை 16 ஆம் திகதியன்று, வடமாகாணம் முழுவதும் கடையடைப்புப் போராட்டத்துக்கான அறைகூவலை விடுத்ததுடன், போராட்டமும் வெற்றிபெற்றது. அது மாத்திரமல்லாமல், நல்லூரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு ஊர்வலமாகச் சென்று, முதல்வருக்கான தமது ஆதரவைதெரிவித்தனர்.

“இந்தச் சமயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் முதல்வருக்கான தமது ஆதரவை தெரிவித்தன. அதுமாத்திரமில்லாமல், இந்தத் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எபின் நீர்வேலி அலுவலகத்தில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி சந்திப்பொன்றை நிகழ்த்திருந்தனர். இதில் கலந்து கொண்ட கட்சிகள், தங்களது கோணங்களிலிருந்து பிரச்சினையின் ஆழ அகலத்தை அலசியதுடன், விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்பதை, ஒரே குரலில் வலியுறுத்தினார்கள்.

“ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரையில், இந்தப் பிரச்சினையென்பது, தமிழரசுக் கட்சி சில அமைச்சர்களை பாதுகாப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி மாத்திரமல்ல, முதலமைச்சரை அலுவலகத்தை விட்டுவெளியேற்றுவதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். தமக்குத்தோதான ஒருவரை முதலமைச்சராக்க போராடினார்கள்.

“ஏனென்றால், வடக்கு, கிழக்கு இணைப்பு அற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை, இறமையை ஏற்றுக்கொள்ளாத பௌத்தத்துக்கு முதலிடம் வழங்குகின்ற ஒற்றையாட்சி அடிப்படையிலான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல் சாசன சீர்திருத்தமென்றை, தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக்கட்சி ஆகியன இணங்கியுள்ள சூழ்நிலையில், வடக்கு கிழக்கில் நிலைமைகளை தமது முழுகட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே உப்புச்சப்பற்ற இத்தீர்மானத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கமுடியும்.

“வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்கினேஸ்வரன் இருந்தால் அதற்கான எதிர்ப்பு என்பது பலமாகக் காட்டப்படுவதுடன், மாகாணசபையில் இதற்கெதிரான பல தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். இதனைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால், இன்றைய முதலமைச்சரை அகற்றி ஒரு டம்மியை உட்காரவைக்க வேண்டிய அவசியம் தமிழரசுக் கட்சிக்கு எழுந்தது.

“அரசின் ஆதரவுடன் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோரால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த சதி நடவடிக்கையானது வடக்கு மக்களின் பேரெழுச்சிக் காரணமாகவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த கட்சிகளின் ஆதரவின் காரணமாகவும், மதகுருமார்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

“இதன் காரணமாக, தமிழரசுக்கட்சி தற்காலிகமான ஒரு தோல்வியை சந்தித்திருந்தாலும் மாகாண சபையை சீராக நடாத்த அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. மாகாண சபையை சீர்குலைத்து முதலமைச்சர் நிர்வாகத்துக்கு பொறுப்பற்றவர் என்ற சூழ்நிலையை உருவாக்கி, அவர் மீது சேறடிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்றே, எதிர்பார்க்கிறேன்.

“இந்தத் தருணத்தில் முதல்வருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. யார் என்ன பேசினார்கள் என்னென்ன வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தார்கள் போன்ற விடயங்களை எழுதுவதனூடாக தாங்கள் பேச்சுவார்த்தையின் பல இரகசியங்களை வெளியிடுவதாக நினைத்து உண்மைக்குப் புறம்பாகவும் திரித்தும், கூட்டிக் குறைத்தும் தாம் விரும்பியவாறும் சமூக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிடுவது மாத்திரமல்லாமல், சில அரசியல்வாதிகள் சார்பாக வருகின்ற பத்திரிகைகளிலும் கற்பனைக் கட்டுரைகளை எழுதி திருப்பதிப்பட்டுக்கொள்கிறார்கள்.

“இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதில் பங்கேற்றவன் என்ற அடிப்படையில் மூன்றாந்தரப்புக்களால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்பவேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம்”
அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .