விவசாயிகளின் போராட்டத்தால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு?

சட்டசபை தேர்தல்உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள், போராட்டம் நடத்தி வருகின்றன.இவர்களுக்கு, மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்; இது, அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி, மீண்டும் புத்துயிர் பெற, விவசாயிகள் போராட்டம் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் மோடி அலையிலும், ஜாதிகளை ஒருங்கிணைக்கும், பா.ஜ.,வின் நடவடிக்கையாலும், ராஷ்ட்ரீய லோக்தளத்தின் ஆதரவு குறைந்தது.

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் திகாயத், பா.ஜ.,வுக்கு எதிராக, விவசாயிகளையும், சிறுபான்மையினரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது பா.ஜ.,வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’ என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.