3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதுக்காக, குறித்த வழக்குகள் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமல் போயுள்ளவர்;களில் 14 பேர் தொடர்பில் இரண்டு தொகுதிகளாக அவர்களுடைய உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் குறித்த வழக்குளைப் பாரப்படுத்தியிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், வடமாகாண மகளிர் விவகார அமைச்சருமாகிய அனந்தி சசிதரனின் கணவர் சம்பந்தப்பட்ட மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற விசாரணைகளின்போது, இந்த மூன்று வழக்குகளின் மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, கந்தசாமி காந்தி ஆகியோருடன் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அதனையடுத்து இந்த மூன்று வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்குகள் தொடர்பாக விசாரணைகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், சாட்சியங்களில் தெரிவித்தபடி, காணாமல் போனவர்கள் என்ன வகையான, என்ன இலக்கமுடைய பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள், என்று சாட்சியத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என முல்லைத்;தீவு நீதிமன்றம், வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) தெரிவித்துள்ளது.

அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் காணாமல் போயுள்ளவர்கள் என தெரிவிக்கப்;பட்டவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டார்களா, அல்லது காணாமல் போனார்களா என்பதைத் தீர்மானிப்பது முடியாதுள்ளது என்றும், காணாமல் போனார்கள் என தெரிவிக்கப்பட்டவர்களுக்கு இந்த மனுக்களின் எதிர்தரப்பினர் பொறுப்பு கூற வேண்டியதில்லை என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்ததே தவிர, அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. அத்துடன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதி மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவற்றை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த கட்டமாக இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் முடிவெடுப்பதுக்காக தவணையொன்றைத் தரவேண்டும் என்று மன்றில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.