450 மின் மாற்றிகள் சேதம்; 4 துணை மின் நிலையங்களில் பாதிப்பு: 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன

‘வார்தா’ புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 450 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து, மின் விநி யோகத்தை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப் படையில் நடந்து வருகின்றன.

சென்னையை நேற்று முன் தினம் ‘வார்தா’ புயல் தாக்கியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட் டன. மரங்கள் வேரோடு சாய்ந்ததா லும், மின் கம்பங்கள் முறிந்ததாலும் மின் தொடரமைப்பில் ஏற்பட்ட துண் டிப்பாலும் இந்த மாவட்டங்களில் மின் விநியோகம் அடியோடு தடை பட்டுள்ளது.

புயலின் தாக்கம் தொடங்கு வதற்கு முன்பே பெரும்பாலான பகுதிகளில் கடந்த 11-ம் தேதி இரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப் பட்டது. சில பகுதிகளில் நேற்று முன்தினம் காலை காற்றின் வேகம் அதிகரித்ததும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை வீசிய பலத்த சூறைக்காற்றின் காரணமாக சென்னை மட்டுமின்றி, புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங் களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிறிய, பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. கட்டிடங்களின் மறைவில் நின்ற மரங்களில் நுனிப்பகுதி மற்றும் கிளைகள் சாய்ந்தன. மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின் தொடரமைப்பு கடுமையாக சேதமடைந்தது.

அதிகாரிகள் குழு ஆய்வு

இதுதவிர, துணை மின் நிலை யங்களுக்கு வரும் மின் தொடர மைப்புகளிலும் பாதிப்புகள் ஏற்பட் டன. புயல் பாதிப்புகள் குறித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் மின்வாரிய தலைவர் சாய்குமார் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

3 ஆயிரம் மின் கம்பங்கள்

புயலால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அனைத்து அனல் மின் நிலையங்கள், பேசின் பிரிட்ஜ் வாயு மின் நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன. புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை மாற்றுவதற்காக 3 ஆயிரம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன. மேலும் 7 ஆயிரம் கம்பங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

இதுதவிர, மரங்கள் முறிந்து விழுந்ததால் 450 மின் மாற்றிகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புதிய மின் மாற்றிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இவற்றை விரைவாக பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த மின்மாற்றிகளைச் சீர மைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்த பகுதிகளில் மின் மாற்றி களைச் சீரமைப்பது சிரமம். ஆனா லும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை, புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கும் தண் டையார்பேட்டை, தரமணி, மணலி, மயிலாப்பூர் துணை மின் நிலை யங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அவற்றின் முக்கிய பாகங்களில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பழுது நீக்கப்பட்ட துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மின் விநியோக சீரமைப்புப் பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ள னர். இவர்களுடன் இணைந்து பணியாற்ற மேலும் 3 ஆயிரம் ஊழியர்கள், 70 பொறியாளர் கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சீரமைக்க 3 நாட்கள்

சென்னையில் இரவுக்குள் மின் விநியோகம் சீரடையும். புறநகர் பகுதிகளில் மின் விநியோகத் துக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இருப்பினும் சேதம் அதிகமாக உள்ளதால் அவற்றை சீரமைக்க 3 நாட்களாகும். தற்போதுள்ள சூழலில் இணைப்பு வழங்கப்பட்டாலும் உடனடியாக ‘டிரிப்’ ஆகிவிடுகிறது. அது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அலுவலர்கள் பழுது பார்த்து மின் விநியோகத்தைச் சீரமைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று காலை கடப்பேரியில் துணை மின் நிலைய சீரமைப்புப் பணிகளை அமைச் சர் பி.தங்கமணி பார்வையிட்டார். முன்னதாக, சென்னை மாநக ராட்சியில் நடந்த ஆய்வுக்கூட்டத் தின்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நகரில் மின் விநியோகம்

இதுவரை சென்னையில் ராஜ்பவன், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, அசோக்நகர், கோடம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், மயிலாப்பூர், ராயப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, ஆவடி, அண்ணாநகர், சிறுசேரி, முகப்பேறு, திருவேற்காடு மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் சென்னை நகர்ப்பகுதியில் மின் விநியோகம் முழுவதுமாக சீரமைக்கப்படும். மற்ற பகுதிகளில் அடுத்தடுத்து பணிகள் முடிந்ததும் மின்சாரம் விநியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.