8 வருடங்களின் பின்னர் அப்பிளுக்கு ஏற்பட்ட இழப்பு

உலகின் முன்னணி ஸ்மார்ட் கைத்தொலைபேசி உற்பத்தி அப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகப்பிரபலமான “ஐ போன்” கைத்தொலைபேசி விற்பனையை பின்தள்ளி சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் வுஹாவி (Huawei) கைத்தொலைபேசி விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடத்தில் இரண்டாவது காலாண்டில் வுஹாவி கைத்தொலைபேசி விற்பனை அதிகரித்தமையே இதற்குக் காரணமென சர்வதேச தரவுக் கூட்டுத்தாபனம் (IDC) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

உலகின் முன்னணி கைத்தொலைபேசி உற்பத்தி நிறுவனமான தென்கொரியாவின் சம்சங் (Samsung) இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 71.5 மில்லியன் கைத்தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள வுஹாவி 54.2 மில்லியன் கைத்தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இதேவேளை, அப்பிள் நிறுவனம் 41.3 மில்லியன் கைத்தொலைபபேசிகளை ஏற்றுமதி செய்யதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சம்சங் உலக கைத்தொலைபேசி சந்தையில் 20.9 வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு, வுஹாவி 15.8 வீதத்தையும், அப்பிள் 12.1 வீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

கைத்தொலைபேசி விற்பனை சந்தையில், கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர், “ஐ போன்” கைத்தொலைபேசிகள் முதல் அல்லது இரண்டாவது இடத்தை இழந்த முதல் சந்தர்ப்பம் இதுவென சர்வதேச தரவுக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.