இதுவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பபு மற்றும் தமிழரசு கட்சியின் போராட்டத்தின் இன்னொரு வடிவமே !

 

துரையப்பா விளையாட்டரங்குத் திறப்புவிழாவிற்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால TNA-MP, சிறிசேனாவுடன் சேர்ந்து உதயன் ஊடக நிறுவன உரிமையாளர் சரவணபவனின் மகளின் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் கொள்கை விளக்கமளிக்க எமது தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் தவறி வருவதால் தமிழ் தேசிய தலைமையின் ஆதரவுத் தளம் தளம்பத் தொடங்கியுள்ளது. இந் நிலையில், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும், ஒரே குடையின்கீழ் அவர்களைத் தொடர்ந்து அணிதிரட்டி வைத்திருக்கவும், அனைத்துக்கும் மேலாக, இச் சம்பவம் தொடர்பில் சர்வதேசத்திற்கு விளக்கமளிக்கவேண்டிய காலத்தின் தேவைகருதியும், இச்செய்தியை வெளியிடுகிறோம். தயவுசெய்து உங்களுடைய பத்திரிகையில் முக்கியத்துவம்கொடுத்துப் பிரசுரித்து எமது கட்சியின் இருப்பைக் காப்பாற்ற உதவவும்.

எமது தலைவருடைய ஒவ்வொரு செயலும் எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் ஒவ்வொரு வடிவங்களே என்பதை இதுவரைகால பட்டறிவிலிருந்து எமது மக்கள் இன்னமும் புரிந்துகொண்டிருக்காதது வேதனையைத்தருகிறது.

இந்நிலையில், ‘உதயன்’ ஊடக நிறுவன உரிமையாளர் திரு சரவணபவனின் மகளின் பிறந்ததின நிகழ்வில் ஜனாதிபதியுடன் எமது தலைவரும் கலந்துகொண்டமைக்கான காரணங்களை விளக்கி தமிழ் உறவுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் தோமப்போன ஒரு இனம் அல்ல என்பதை இலங்கை அரச அதிபருக்கு எடுத்துக்காட்டவே எமது தலைவர் சரவணபவனின் இல்ல பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் என்பதை எமது உறவுகள் தெரிந்துகொள்ளணெ;டும். இதனைக் கொச்சைப் படுத்தி சில இணையத்தளங்களில் செய்திகள் வெளிவருவது 24 மணி நேரமும் எமது மக்களின் விடுதலைபற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் எமது தலைவருக்கும், ஊடகப் போராளி சரவணபவனிற்கும் எத்துனை கவலையைத்தரும் என்பதை எண்ணிப்பார்க்குமாறு எமது உறவுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

பிறந்ததின விழாவில் சரவணபவனின் மகள் கேக் வெட்டும்போது எமது தலைவர் கைகட்டி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்ட எந்தவொரு ஊடகமும் அவர் கேக் சாப்பிடுவதாக புகைப்படம் எதனையும் வெளியிடவில்லை என்பதை எமது மக்கள் கண்டுகொள்ளவேண்டும். ஏனெனில் எமது தலைவர் கேக் சாப்பிட மறுத்துள்ளார். வலி வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும்வரை எமது தலைவர் கேக் சாப்பிடப்போவதில்லை என்பதை எமது மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அந்தப் படத்தை உற்றுப்பார்ப்பவர்கள் எமது தலைவரின் கண்கள் குளமாகியிருப்பதையும், சரவணபவனின் வாய் தமிழ், தமிழ் என முணுமுணுத்துக்கொண்டிருப்பதையும் கண்டுகொள்வார்கள். தெளிவான படமொன்றைப் பிரசுரிக்காமல் ஊடகங்கள் இதனைத் திட்டமிட்டே மறைத்துள்ளன என்பதை எமது மக்கள் கண்டுகொள்ள வேண்டும்.

முக்கியமாக இன்னொரு விடயத்தையும் எமது மக்களுக்குத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றம்பற்றி எமது தலைவர் ஜனாதிபதியுடன் கதைக்கவில்லை என ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். பிறந்ததின நிகழ்வைப்பயன்படுத்தி ஜனாதிபதியுடன் எமது தலைவர்; கடும்தொனியில் கதைத்ததை நாம் உறுதிப்படுத்துகிறோம்.

வலி வடக்கு மக்களை எப்போது மீளக் குடியேற்றப்போகிறீர்கள் என எமது தலைவர் ஜனாதிபதியிடம் வினவியபோது, அவர் இடம்பெயர்ந்து மக்கள் தற்போது எங்கே இருக்கிறார்ள் எனக் கேட்டிருந்தார். அதற்கு எமது தலைவர் வலி வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் எனப் பத்திரிகைகளில் செய்திகள் வருவதால் அவர்கள் வலி வடக்கிலேயே இருக்கவேண்டும் எனக் காட்டமாகப் பதில் சொன்னதைத் தொடர்ந்து அங்கு எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன, ஏன் இருக்கின்றன, எவ்வளவு காலமாக இருக்கின்றன என சரமாரியாக எமது தலைவரிடம் மேதகு ஜனாதிபதி கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு சளைக்காமல் எதிர்வரும் இருபத்தைந்தாம் திகதி கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் சந்திக்கும்போது அது தொடர்பில் அறிந்து சொல்வதாக ஜனாதிபதியிடம் எமது தலைவர் தெரிவித்துள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நாம் இங்கு பதிவுசெய்துகொள்ள விரும்புகிறோம்.

சர்வதேசம் எமது தலைவர்களுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கிக்கொண்டிருப்பதால் எமது தலைவர்கள் ஒருபோதும் தவறுசெய்யமாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தந்தை செல்வா வழிநின்று போராடி இழந்த உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் தரும்வரை தமிழ் மக்கள் பொறுமைகாக்கவேண்டும் எனவும், தென்னிலங்கை அரசின் சூழ்ச்சிக்கு பலியாகக்கூடாது எனவும் எமது தலைவர் சார்பாக எமது உறவுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

(Ramaraj Veerahia)