ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்

 
ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள குறிப்பான பிரச்சினைகள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை பதுளை மற்றும் அப்புத்தளை பிரதேச ஆசிரிய உதவியாளர்கள் முறையே இம்மாதம் 25 மற்றும் 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்களுக்கு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்துரை வழங்க வரவழைக்கப்பட்டிருந்தார். இதன் போது இரு பிரதேசங்களுக்குமான ஆசிரிய உதவியாளர்களும் செயற்குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளதுடன், ஊவா மாகண கல்வி அமைச்சு ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் குறைப்பை செய்வதற்கு எடுத்து வரும் நடவடிக்கையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை செயற்குழுக்கள் ஊடாக மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. தனது கருத்துரைகளில் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை தரம் 3 வகுப்பு ஐஐ ற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஆசிரியர் சேவைக்கு உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி கோரிக்கைகளை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் அணித்திரள வேண்டும் என்றார்.