ஒரு வாக்குமூலம்

நவம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை ஸ்காபரோ யுடவழn வுழறநச Pயசவல ர்யடட இல் அறிமுகம் செய்து வைக்கப்படும் “தாங்கொணா துன்பம்” நூலிலிருந்து….

-சாந்தி விவேகானந்தன்-

பெற்றோரின் பிள்ளை. எனது கணவர். என் பிள்ளைக்கு தந்தை. தங்களது?
செப்டெம்பர் 14, 1990 ஆம் ஆண்டு. அது ஒரு இரவு நேரம் நாங்கள் அனைவரும் நித்திரையில் இருந்தோம். இந்த இரவுதான் எனக்கும் அன்ரனுக்கும் எங்களது மகன் மகிந்தனுக்குமான கடைசி இரவு என்பது எனக்கு அப்போது தெரியாது. இரவு 10 மணியளவில் “அண்ணை அண்ணை” என்று யாரோ கூப்பிடும் சத்தம் எனக்குக் கேட்டது. நான் எழுந்து யாரோ வெளியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என்று எனது கணவரை எழுப்பிச் சொன்னேன். அவர் டோர்ச் லைட்டால் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கே இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.


“எனக்கு விளங்கிவிட்டது.“இரண்டு புலிப்பொடியன்கள் வந்திருக்கின்றார்கள்” என எனது கணவர் என்னிடம் கூறினார். எவரும் தப்பிப்போகாமல் இருப்பதற்காக அவர்கள் ஏற்கனவே பின் கதவை உலக்கையால் முட்டுக் கொடுத்து அடைத்து வைத்திருந்தார்கள். அவர் வீட்டில் இல்லை, அவர் அவரது அம்மா வீட்டுக்கு போய்விட்டதாக நான் கூறினேன். ஆனால் அவர்களோ தாங்கள் ஏற்கனவே அங்கு போய் பார்த்ததாகவும் அங்கே அவர் இல்லை எனவும் கூறினார்கள். நான் கதவைத் திறக்க மறுத்தேன், எனது கணவர் கதவை திறக்க வேண்டாம் என கூறினார். “கதவைத் திறவுங்கள் நாங்கள் அவரை விசாரிக்க வேண்டும்” என அவர்கள் கூறினார்கள். காலையில் வாருங்கள் என நான் அவர்களிடம் கூறினேன். அப்போது இரவு 10 மணியளவில் இருக்கும். மேலும் எனது கணவரை கூட்டிக்கொண்டு போவதானால் எங்களையும் அவருடன் கூட்டிச் செல்லுங்கள் என நான் அவர்களிடம் கூறினேன்.
நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம், சும்மா கதவைத் திறவுங்கோ என அவர்கள் கூறினார்கள். எமது வீட்டுக்கு சற்று தொலைவிலிருந்த புலிகளின் முகாமிலிருந்து அதன் பொறுப்பாளர் வந்திருந்தார். நாங்கள் கதவைத் திறந்தோம். தயாராக வைத்திருந்த துப்பாக்கிகளுடன் புலிகள் எங்கள் வீட்டை சுற்றிவளைத்திருந்தனர்.
புலிகளின் முகாம் பொறுப்பாளர் செங்கதிர் உள்ளே வந்தார். அவர் எனது கணவருக்கு மிக அருகில் வந்து கணவரின் பாதத்தை மிதித்தபடி நின்றுகொண்டார். இனிமேல் நான்; அவரைப் பார்க்க முடியாது என எனக்குப் புரிந்துவிட்டது. என் கணவரை கட்டியணைத்துக்கொண்டு நான் அழுதேன்.
“எங்களது உணர்வுகளை வீணடிக்க வேண்டாம் என செங்கதிர் கூறினார். நீங்கள் ஒரு அசிங்கமான (ஆபாசமான) முறையில் நின்றுகொண்டிருக்கின்றீர்கள், அங்கே இளம் பெடியனகள் வெளியில் நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என என்னை இழிவுபடுத்தினார். செங்கதிர் குடி போதையில் இருந்தார், அவரிடமிருந்து மது வாசனை வீசிக்கொண்டிருந்தது.
“எங்களால் என்னதான் செய்ய முடியும்?நான் போட்டு வாறன்” என எனது கணவர் கூறினார். அந்த நேரத்தில் எனது மகனும் எழும்பியிருந்தான். “நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம், சும்மா விசாரித்துவிட்டு விடுவோம்” என செங்கதிர் கூறினார். அவர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். நான் என்னால் இயலுமான தூரம் சந்திவரை பின்தொடர்ந்து ஓடிச் சென்று கத்தி அழுதேன். மோட்டார் சைக்கில் ஒரு வளைவில் திரும்பி மீண்டும் வந்தது. எனது கணவர் தனது செருப்புகளை மறந்து விட்டதாக கூறினார். நான் அதனை கொண்டு வந்து கொடுத்தேன். அவர் எமது மகனை முத்தமிட்டுவிட்டு சென்று விட்டார்.
நாளை காலை 10 மணியளவில் இணுவிலிலுள்ள முகாமுக்குப் போகும்படியும் அங்கு ராபீPக் என்பவர் இருப்பார் அவரை சந்திக்குமாறும் செங்கதிர் எனக்கு கூறினார். மறுநாள் நான் எனது அப்பாவுடன் அங்கு சென்றேன். அப்பா அப்போது தான் வைத்தியசாலையிலிருந்து வந்திருந்தார். அந்த முகாமில் 3 பேரை தவிர வேறுயாரும் இருக்கவில்லை. ராபீPக் வந்து என்ன விஷயம் என எங்களை விசாரித்தார். செங்கதிர் இங்கு இருப்பதாக கூறினார் என நான் கூறினேன். செங்கதிர் இங்கு வரமாட்டார் என ராபீPக் கூறினார். நாங்கள் கோண்டாவிலிலுள்ள பெரிய முகாமுக்கு போனோம். அங்கு சென்றபொழுது அவர்கள் எங்களை ஒரு மண்டபத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு செங்கதிர் அங்கு வந்தார். அவர் எனது மகனை குட்டியண்ணா என அழைத்துவிட்டு;,
“இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டதுஇ உங்களது கணவரை விசாரிப்பவர் அவரது முன்னாள் மாணவர். பார்த்தீர்களா காலம் எப்படி மாறிப்போய்விட்டது” என செங்கதிர் கூறினார். நாங்கள் விசாரணையாளரை தொடர்புகொண்ட பிறகு அவரை விடுதலை செய்கின்றோம் எனக் கூறினார்.

அவர்கள் 14ம் திகதி அவரை பிடித்துக்கொண்டு சென்றனர். 15ம் திகதி நாங்கள் போய் விசாரித்து விட்டு திரும்பி வந்தோம். 16ம் திகதி நான் விசாரணை முகாமிற்கு சென்று ஒரு பத்திரத்தை நிரப்பிவிட்டு வந்தேன். அந்தப் பத்திரத்தில் பெயர், விலாசம், அவரை கைது செய்ததற்கான காரணம் என்பன கேட்கப்பட்டிருந்தது. எனக்கு அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெரியாது அதனால் அதில் எனக்குத் தெரியாது என எழுதியிருந்தேன். நான் வீடு சென்றபொழுது இருவர் எனக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

“இந்த வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி இருக்கின்றது, அது எங்களுக்கு வேண்டும்” எனக் கூறினார்கள். எனக்கு கைத்துப்பாக்கி பற்றி எதுவும் தெரியாது என நான் கூறினேன். அவர்கள் வீட்டை சோதனை செய்தார்கள். “நீங்கள் எங்களை நம்ப மாட்டீர்கள்” எனக் கூறியதோடு கணவரிடமிருந்து கொண்டுவந்த ஒரு கடிதத்தைக் காட்டினார்கள், அக்கடிதத்தில் இந்த வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும் அதை எடுத்து அவர்களிடம் கொடுக்கும்படியும் எழுதியிருந்தது. “ என்னால் உனக்கு ஏற்படும் தாங்கொணா துயரங்களுக்காக என்னை மன்னித்துவிடு” என்றும் கடிதத்தில் மேலும் எழுதியிருந்தது. அது எனது கணவரின் கையெழுத்தில்தான் இருந்தது.

தொடரும்….

பி.எல்.எப்.ரி. அன்ரன் சந்திக்க வைக்கப்பட்டார்.
-சண்முகம் சுப்ரமணியம் –

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் எழுந்து கொண்ட காந்தியும் உதயனும், தம்முடன் வரும்படி எனக்குக் கூறிவிட்டு முன்னால் நடந்தனர். நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அந்த இருட்டில் நான் எங்கும் தப்பி ஓடிவிடாதபடி இரு புலிகள் துப்பாக்கிகள் சகிதம் எனது இருபக்கமும் காவலுக்கு வந்தனர். சில அடிகள் தூரம் சென்றதும் அவர்கள் இருவரும் ஓரிடத்தில் நின்றனர்.
திடீரென் எனது முகத்தக்கு மிகவும் பிரகாசமான ரோச் லைற் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. அதேபோல் எனக்கு முன்னால் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர் மீதும், அதேபோன்ற ஒரு ரோச் லைற் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதை நான் கண்களை விழித்து உற்றுப் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்! எனக்கு முன்னர் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்ட விசுவானந்ததேவனின் பி.எல்.எப்.ரி இயக்க முக்கியஸ்தர் அன்ரன் (விவேகானந்தன்) அங்கு நின்று கொண்டிருந்தார். அதே தோற்றம், அதே தாடி கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. குழி விழுந்த கன்னங்களை தாடி மறைத்துச் கொண்டிருப்பதும் தெரிந்தது. கறுப்பும் வெள்ளையுமான ஒரு ரீ சேர்ட் அணிந்திருந்தார். அவரும் ஆச்சரியமாக என்னை உற்றுப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார்.
“விவேகானந்தன் உன்ரை மணியண்ணை வந்திருக்கிறார். அவருக்கு நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு” என காந்தி அவரைப் பார்த்துக் கூறினான்.
அன்ரன் எவ்வித தயக்கமுமின்றி, சொல்லிக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்வது போல,“மணியண்ணை உங்களாலை இந்தச் சித்திரவதைகளை எல்லாம் தாங்கேலாது. ஆனபடியாலை உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லுங்கோ” என்று கூறினார். அவ்வளவுதான். ரோச் லைற்றுகள் அணைக்கப்பட்டு இருவரும் திரும்பி அழைத்துச் செல்லப்பட்டோம்.
அன்ரனை அந்த நிலையில் கண்டது எனக்கு மனக்கவலை அளித்தாலும், இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் அவரது இளம் மனைவியும் கைக்குழந்தையும் மட்டுமின்றி, அவருடன் பழகிய அனைவருமே அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற மனக் கிலேசத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மன உழைச்சல் பட்டுக் கொண்டிருந்தோம். இப்பொழுது அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை எனது இரண்டு நிஜக் கண்களாலும் கண்டதுடன், அவரது வார்த்தைகளையும் கேட்டுவிட்டேன். அதன் காரணமாக ஒருவித மன நிம்மதி ஏற்பட்டது.
அன்ரன் என்னிடம் கூறிய வார்த்தைகள் புலிகளால் திட்டமிட்டு சொல்லி வைக்கப்பட்டவை என்பதை ஊகிக்க எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. தில்லையை என்னுடன் கதைக்க வைத்திருந்தாலும், இதே வார்த்தைகளைத்தான் தில்லையைக் கொண்டும் சொல்ல வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
(தொகுப்பாhளர் குறிப்பு :- தில்லை என அழைக்கபபடும் யாழப்பாணத்தைச் சேர்ந்த தில்லைநாதன் என்னும் ஆசிரியரும் புலிகளால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்)
ஆனால் இதிலுள்ள முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகள் என்னிடம் என்.எல்.எப்.ரி அல்லது பி.எல்.எப்.ரி சம்பந்தமான பல இரகசியமான விடயங்கள் இருக்கின்றன எனக் கருதியதுதான். ஆனபடியால்தான் அவர்கள் அன்ரன் மூலமாக எனக்கு “புத்திமதி” சொல்ல எத்தனித்திருக்கின்றனர். அதாவது தனது சித்திரவதை முறைகளை அன்ரன் மூலம் சொல்லிப் பயமுறுத்தி, என்னிடமிருந்து விடயங்களைக் ‘கறக்கலாம்’ என எண்ணினர் போலும்!
என்னைப் பொறுத்தவரை, அவர்கள் கருதுவது போல என்னிடம் எந்தவிதமான இரகசியத் தகவல்களும் இல்லையென்பதுடன், மாமேதை லெனின் ஒருமுறை கூறியதுபோல ‘கம்யூனிஸ்ட்டுகளான எமது கொள்ளைகள் எந்தவித ஒளிவு மறைவுமற்றவை’ என்பதே உண்மையாகும். புலிகளுடன் எமக்கு நேரெதிரான கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், அவற்றை நாம் அரசியல் ரீதியாகத்தான் தீர்த்துக் கொள்வோமேயாழிய. சதி சூழ்ச்சிகளில் ஈடுபடுவது எமது நோக்கமோ வேலைப்பாணியோ அல்ல என்பது தெளிவானது. (ஆனால் புலிகள் அதற்கான ஜனநாயக இடைவெளியை ஒருபோதும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை).
இந்த இடத்தில் புலிகள் ‘வேலை மினக்கெட்டு’ என்னைச் சந்திக்க வைத்த அன்ரனைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது அவசியமானது. ஏனெனில் தங்கள் சொந்த வாழ்க்கையை இந்த சமூக அமைப்பில் ஓரளவு சிறப்பாக தகவமைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தும், அவ்வாறு செய்யாமல், தமத மக்களுக்காகவும், தாம் வரித்துக்கொண்ட இலட்சியங்களுக்காகவும் இறுதிவரை விசுவாசத்துடனும் ஆத்ம சுத்தியுடனும் வாழ்ந்து மரணித்த மகத்தான மனிதர்களில் அன்ரனும் ஒருவர். அதுவும் புலிகள் போன்ற அந்த மண்ணிலேயே உருவான பாசிசக் கொடுங்கொலர்களின் கரங்களினால் மரணத்தைத் தழுவிக் கொண்ட பல ‘மாமனிதர்களில் அன்ரனும் ஒருவர்.
அன்ரன் போன்ற இத்தகைய தியாகிகளே எமது வருங்கால சமுதாயத்தின் ஆதர்ச புருசர்களாக இருக்கப் போகிறவர்கள். அவர்களது மரணங்கள் – அவர்கள் எதற்காகக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள், எப்படிக் கொல்லப்பட்டார்கள், என்னவிதமான சித்திரவதைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டன, அவர்கள் எங்கு வைத்துக் கொல்லப்பட்டார்கள், அவர்கள் மீது என்னவிதமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பன போன்ற விவரங்கள் எமது சமூகத்தின் முன்னால் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
——————————————————————————————————————————————————————————–
பாசிசம் பலிகொள்ளும் ஒவ்வோர் உயிரும்;
உயர்ந்தது ! பெறுமதி மிக்கது !! நினைவுகூரப்பட வேண்டியது !!!
– எஸ் மனோரஞ்சன் –
தோழர் அன்ரனின் கைதும் தடுத்து வைப்பும் கொலையும்.

எமது அமைப்பின் தோழர் அன்ரன், ரமணன் உட்பட மேலே நான் குறிப்பிட்ட பலரும் தாம் ஏன் அந்தச் சூழ்நிலையில் வெளியேற தவறினோம் என்பதற்கு பல்வேறு காரணங்ககை; கூறலாம். அந்தக் காரணங்கள் அவரவர்களைப் பொறுத்தவரை அந்தக் காலகட்டத்தில் சரியான காரணங்களாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும் இவர்கள் அனைவரையும் கைது செய்து வதைப்பதற்கு அல்லது கொல்வதற்கு புலிகளுக்கு இருந்த காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது இவர்கள் புலிகளுக்கு எதிரான கருத்தைக் கொணடிருந்தவர்கள், புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்லது எதிர்காலத்தில் செயற்படக் கூடியவர்கள் என்கின்ற ஒரு காரணம் மட்டும்தான்.
பாசிசததைப் பொறுத்தவரை ஒருவரைக் கொல்வதற்கு அந்த நபர் அதற்கெதிராக வெளிப்படையாக செயற்படத்தான் வேண்டும் என்பதில்லை. தமக்கெதிராக அந்த நபர்கள் சிந்திக்கிறார்கள்; என்ற ஊகம் ஒன்றே அவர்களைப் பிடித்துக் கொல்வதற்கு போதுமானது. அந்த சிந்தனைக் குற்றமே பாசிசம் ஒருவர் மீது தன் கொலைக்கரங்களைப் பதிப்பதற்குப் போதுமானது. ஏனெனில் பாசிசம் அவ்வளவு பலவீனமானது. வெளித்தோற்றத்தில் அது சாதாரண மக்களுக்கு அச்சம் தரும் பலமான இயந்திரமாக காட்சியளித்தாலும் உள்ளுர அது பலவீனமானது. எனவேதான் அது தன்னை பலமானதாக காண்பிக்க சமூகத்தின் பலமான அம்சங்கள்அனைத்தையும் படிப்படியாக அழித்து விடும். இறுதியில் பாசிசம் அழிக்கப்படுகின்ற பொழுது அதன் மீது தங்கி நின்ற,தங்கிநிற்க நிர்ப்பந்திக்கப்பட்ட அச்சமூகம் நலிந்து, நொருங்கி, நாதியற்றுப்போய் நடுத்தெருவில் நிற்கும். அதற்கு இன்றைய ஈழத் தமிழ் சமூகமே நிதர்சனமான சாட்சியாக எம்முன் நிற்கின்றது.

ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் பாராமல் புலிகளால் கடத்திச் சென்று அல்லது கைது செய்து அல்லது அநாமதேயமாக வீதியல் வைத்து கொல்லப்பட்டவர்கள் மற்றும் புலிகளின் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரினதும் மனைவிமார்கள், கணவன்மரர்கள், பிள்ளைகள், பெற்றோகள் மற்றும் உடன் பிறப்புக்கள் பட்ட துன்பங்களையும், தவிப்புக்களையும், மன உளைச்சல்களையும் வெளிக்கொணருவதானால் பலநூறு நூல்கள் வெளிவந்தாக வேண்டும். தோழர் அன்ரனின் இழப்பால் அவரது துனைவி சாந்தியும் அவரது மகன் மகிந்தனும் பட்ட துன்பங்களும் முகம் கொடுத்த சவால்களும் ஏராளம். அத்தனையையும் தாங்கி, சகல சவால்களையும் தாண்டி ஒரு உறுதியான பெண்ணாக, தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு ஒரு தோழியாக மௌனமாக சாந்தி வாழந்த வாழ்கையின் அர்தத்தையும் கனதியையும் அவர் மட்டுமே அறிவார். அவருக்கும் அவர் போன்ற அனைவருக்கும எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாக வேண்டும்.நமது சமூகத்தின் கடைகெட்ட கயமைத்தனமான பண்பாட்டினாலும், அதன் கருவில் பிறந்த புலிகளின் பாசிசக் கலாச்சாரத்தினாலும் போசிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு இன்னமும் அழுத்தமாக நமது சமூகத்தை மூடியிருக்கும் கொடிய, இருண்ட,பொய்மைத் திரையை கிழித்தெறிந்தபடி சாந்தி போன்ற ஏனையவர்களினதும் கதைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.