‘கட்டலோனியாவின் சுயாட்சியை இல்லாது செய்வேன்’

கட்டலோனியா பிராந்தியம், தனிநாட்டுச் சுதந்திரம் பற்றிய அச்சுறுத்தல்களை நிறுத்தாவிட்டால், அப்பிராந்தியத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சியை இல்லாது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய் எச்சரித்துள்ளார். கட்டலோனியாவில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளவுள்ளதாக, கட்டலோனியா அச்சுறுத்திவரும் நிலையிலேயே, இந்த எச்சரிக்கையை, பிரதமர் வெளியிட்டுள்ளார்.

ஸ்பெய்ன் அரசமைப்பின்படி, கட்டலோனியா பிராந்தியத்துக்கான சுயாட்சியை இல்லாது செய்து, ஸ்பெய்ன் மத்திய அரசாங்கத்தின் நேரடியான ஆட்சியை ஏற்படுத்த மாட்டார் என உறுதியளிக்க முடியுமா என, பிரதமரிடம் கேள்வியொன்று கேட்கப்பட்டபோது, “எதையும் நான் இல்லையென்று சொல்ல மாட்டேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று வெளியான பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணிலேயே, இதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஆனால் நான், எதையும் பொருத்தமான நேரத்தில் செய்ய வேண்டும். சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு விரைவாக வாபஸ் பெறப்பட வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஸ்பெய்னின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களைச் சமாதானப்படுத்தும் வார்த்தைகளைக் கூறிய அவர், “சுதந்திரத்துக்கான அறிவிப்பென்பது, எந்நிலைக்கும் இட்டுச் செல்லாது என்பதை, அரசாங்கம் உறுதிப்படுத்தும்” என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே, இன்று (09) திங்கட்கிழமை, தமது சுதந்திர அறிவிப்பை வெளிப்படுத்தவுள்ளதாக, கட்டலோனியா அறிவித்திருந்தது. ஆனால் பின்னர், அதற்கான நாடாளுமன்ற அமர்வு, செவ்வாய்க்கிழமைக்குப் பிற்போடப்படுகிறது என, அப்பிராந்தியம் அறிவித்தது. ஆனால், நாளை இடம்பெறவுள்ள அமர்வில், சுதந்திரப் பிரடகனம் இடம்பெறுமா என்பது, இதுவரை உறுதிப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது.

சுதந்திரப் பிரகடன விடயத்தில், இரு தரப்புகளும் கடும்போக்கை வெளிப்படுத்தி வந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பன்று, மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்காக, ஸ்பெய்ன் மத்திய அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளமை, இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு அவ்வரசாங்கம் தயார் என்பதைக் காட்டுகிறது எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, கட்டலோனியாவின் சுதந்திர முயற்சிகளுக்கு ஆதரவாக, அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், சுதந்திர முயற்சிகளுக்கு எதிராக, ஸ்பெய்னின் ஏனைய பகுதிகளும், ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நேற்று இடம்பெற்றிருந்தன.