கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.


ஒரு சமூகத்தின் போராட்ட வடிவத் தெரிவென்பது அந்த சமூக உறுப்பினர்களின் கப்பாசிட்டியைப் பொறுத்தது. வீதியில் இறங்கி நான்கு பேர் நீதி கேட்கும் போதே அதற்கு ஆதரவாக நானூறு பேர் வரும் போது அரச அதிகாரத்திற்கும் பொறுப்புக் கூறும் தரப்புகளுக்கும் நெருக்கடி வர ஆரம்பித்து விடும். ஆனால் நாமோ சாகும் வரை உண்ணாவிரதம் போன்ற அல்லது உயிருடன் தொடர்புடைய போராட்டங்களுக்கு மாத்திரம் செண்டிமெண்டல் ஆகி ஆதரவளிப்பது மிகுந்த அரசியல் புரிதல் குறைந்த சமூகமென்பதையே காட்டுகிறது. வாழும் உரிமைக்கெதிராக நிகழும் அனைத்துமே எதிர்க்கப் பட வேண்டியதே. உண்மையில் நாம் போராடக் கூட இல்லை, ஆதரவு மட்டுமே அளிக்கிறோம். அதற்கு கூட பின்னாடித்தால் எதிர்காலத்தில் மக்கள் கைக்கொள்ளப் போகும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கப் போவது இந்த சமூகத்தின் அக்கறையின்மை தான்.
கேப்பாபுலவில் இடம்பெறும் போராட்டத்திற்கு குறைந்தது ஒரு பகலாவது சென்று ஆதரவளியுங்கள் தோழர்களே.
ஏராளமான சமூக வலைத்தளத்தில் இயங்கும் இளைஞர்கள் இருக்கிறோம். பல்கலைக் கழகம் இருக்கிறது. யாருக்கும் ஏன் நேரில் செல்ல முடியாமல் இருக்கிறது. வவுனியா உண்ணாவிரத போராட்ட நேரம் பல்கலைக் கழக மாணவர்கள் சொன்னார்கள் “இப்பொழுது பல்கலைக் கழகம் லீவு இல்லையென்றால் நிறையப் பேர் வந்திருப்பம்” என்று. இப்பொழுது பல்கலைக் கழகம் ஆரம்பித்து விட்டது. என்ன செய்யப் போகிறீர்கள்?
சமூக வலைத்தள நண்பர்களுக்கு எல்லா நேரமும் போராட வேண்டிய அவசியமில்லைத் தான். ஆனால் யாருக்காவது நேரமிருந்தால் கொஞ்சம் சென்று இருந்து கதைத்து வாருங்கள். அங்கு செல்ல தொடர்புகள் வேண்டுமென்றால் நான்
தருகிறேன். என்னுடைய நண்பர்கள் சிலர் முழு நேரமாக அங்குதானிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தேவை. நாம் தேவை.
கிரிஷாந்த்