தோப்பில் மாமாவுக்கு அஞ்சலி .

கடலோரக் கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி தவிர எல்லாமே வந்தவுடன் அழைத்து தந்து படித்துக் கருத்து கேட்பார். அவ்விரண்டையும் போலவே கூனன் தோப்பு, துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் என எல்லா நாவல்களுமே தமிழக இசுலாமிய சமூகத்தின் உள்கட்டுமான நெருக்கடிகள் பற்றிய அலசல்களே.வியாபாரம் சார்ந்து திருநெல்வேலியில் வாழ நேர்ந்தாலும் எழுத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தான் இருந்தார். சிறுகதைகளில் குறிப்பான வெளிகளைப் பார்க்க இயலாது.

சாய்வு நாற்காலிக்காக சாகித்ய அகாதமி விருது(1998) பெற்றவுடன் ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியபோது மகிழ்ச்சி அடைந்தார். பேராசிரியத் திறனாயவாளர்கள் தி.சு.நடராசன், துரை.சீனிச்சாமி, பா.ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்கள். துறைக்கு அழைக்கும்போது மறுக்காமல் வருவார். வாகனம் ஏற்பாடு செய்தால் போதும். சில தடவை நானே போய் விடுவேன். பல்கலைக் கழகத்தில் ஆட்சிப்பேரவை, பாடத் திட்டக்குழு , விருதுத் தேர்வுக்குழு எனப் பலவற்றில் இருந்தார். கடைசியாக -பிப்ரவரியில் ஆங்கிலத்துறை மேடையில் ஒன்றாக அமர்ந்து பேசினோம்.

அதன்பிறகு இலங்கையிலிருந்து சிராஜ் என்ற நண்பர் வந்தபோது தொலைபேசியில் பேசினேன். தோப்பில் எடுக்கவில்லை.’ பார்க்க வரலாம்; நீண்ட நேரம் இருந்து பேச முடியாது’ என்று எடுத்த பெண் சொன்னார். அவரோடு போய் ஒரு எட்டுப்பார்த்துவிட்டு வந்திருக்கலாம். பார்க்க முடியாமலேயே போய்விட்டது.