நண்பர் வீரகத்தி சேந்தன் நினைவாக:

ஆனால், சிலரின் வாழ்க்கை நினைவுகள் அவருடைய குடும்பத்தினரிடம் மட்டுமின்றி அவருடன் பழகிய பலரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நீடித்து நிற்பது ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய சிறப்புதான்.

என்னைப் போன்ற மார்க்சியத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, பலதரப்பட்ட மனித நேயர்களுக்கும் சேந்தன் ஒரு தோழனாக மட்டுமின்றி, நண்பனாக, சகோதரனாக, கூடப் பயணிப்பவனாக இருந்துள்ளார். அதுவே அவரது வாழ்வின் சிறப்பம்சமாகும்.

அவருடனான எனது அறிமுகம் அவரது தகப்பனாரான பண்டிதர் க.வீரகத்தி மூலம் 1980ஆம் ஆண்டளவில் நிகழ்ந்ததாக ஞாபகம். அப்பொழுது அவர்கள் குடும்பம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் கலட்டிச் சந்திக்கருகில் ஒரு வீட்டில் குடியிருந்தது. அன்றிலிருந்து தொடங்கிய அவருடனான உறவு அவருடன் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினர்கள், சகோதரர்கள், மைத்துனர்கள் அவர்களது பிள்ளைகள் எனத் தொடர்ந்து வந்துள்ளது.

நண்பர் சேந்தனும் நானும் கடுமையான யுத்த நாட்களில் எமது சொந்த பூமியான எமது மண்ணில்தான் எமது வாழ்நாட்களைக் கழித்தோம். அந்த நேரத்தில் நாம் வரித்துக்கொண்ட கொள்கைகளால் – அதாவது அவரது மனிதநேய நிலைப்பாட்டாலும், எனது சோசலிசக் கொள்கைகளாலும், பாசிசப் புலிகளின் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு பல மாதங்கள் அவதியுற்றோம். இருப்பினும் கடைசி மூச்சுவரை அவர் தனது நீதி நியாயத்துக்கான பயணத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை.

இத்தகைய மனிதர்கள் தமிழ் சமூகத்தில் பிறந்து வாழ்வது மிக அரிது. அத்தகைய மிக அரிதான மனிதர்களில் ஒருவர் சேந்தன். அவருடனான எனது 40 வருட உறவை, அதன் அனுபவத்தை, அதன் தாற்பரியத்தை, அதன் பெறுமானத்தை, அதன் நினைவுகளை, எடை போடுவதோ அல்லது நினைவில் வைத்துப் பேணுவதோ சாத்தியமான ஒன்றல்ல. இருப்பினும் எனது தாய் தந்தையரை நினைப்பது போல எனது உற்ற தோழன் சேந்தனையும் நினைவில் வைத்துப் போற்றாமல் இருக்க முடியாது.

40 வருட நட்பை, தோழமையை ஒரு சில வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. ஆனால், ஒரு ஆலமரம் வீழும்போது அந்த இடத்தில் இன்னொரு விருட்சம் தோன்றும் என்ற நம்பிக்கைதான் எம்மையெல்லாம் ஆண்டாண்டு காலமாக வழி நடத்திச் செல்கிறது.

நண்பர் சேந்தனின் மறைவுக்கு எனதும் எனது குடும்பத்தினதும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் செலுத்தி ஆறுதல் அடைகின்றோம்.

(Maniam Shanmugam)